Home / வசந்தியின் பக்கங்கள் / புலமும் பலமும்

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும்.

எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட நத்தார் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்துக் கொண்டு பணத்தையும் அனுப்பி விட்டு, ஓடோடி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைக்க, அவர்கள் யாழ்ப்பாண நேரப்படி அரைச்சாம நித்திரையிலிருந்து எழுந்து ‘ஹலோ!’ என்று தூங்கி வழிய, பணம் அனுப்பியிருக்கும் விடயத்தை மட்டும் சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் வேலையை முடித்து கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து பணம் கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொண்டால், வழமையான விசாரிப்புக்களின் பின்னர்,

 

“அப்ப பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?”
என்ற கேள்வியில், ஏற்கனவே முழங்காலில் இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்டும் அறுவைசிகிச்சை செய்யலாமா வேண்டாமா? என்ற கேள்விகளோடும் வேலைக்குச் சென்று நிற்க முடியாமல் தள்ளாடி வந்த எனக்கு, சுரீர் என்று கோபம் தலைக்கேறப் பார்த்தது. கட்டுப்படுத்தி, “ ஒண்டும் செய்யேல்லை, இப்பதான் வேலையால வந்தனான்” என்று என்னைக் கட்டுப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சியே.
நமது ஊரில் நத்தார் தினத்தன்று கொழுக்கட்டை அவிப்பார்கள். இந்தப் பழக்கம் எப்படி எங்கிருந்து வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. ‘கட்டிகை’ (Cake) யும் செய்வார்கள். ஆலயத்தில் இரவு வழிபாடுகள் நடக்கும். எமது ஆலயத்திற்குள் செய்யப்படும் பாலன் குடிலில், வெளியே நிலத்திலிருந்து பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்பட்ட மண்ணுடன் சேர்ந்த புற்கள் இயற்கையான அலங்காரமாக அழகாக இருக்கும். ‘பாலன்’ கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு எப்போதும் போலச் சிரித்துக்கொண்டிருப்பார். வழிபாடுகள் முடிய விழுந்தடித்துக் கொண்டு பாலனை விழுந்து கும்பிடுவோம்.
அத்தோடு நத்தார் விழா முடிவடைந்து விடும்.
ஆனால், அந்த இருபத்தைந்தாம் திகதியிலிருந்து முதலாம் திகதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அதிகமாக இருக்கும். புது ஆடைகள் வாங்குவதிலிருந்து, என்னென்ன பலகாரங்கள் செய்வது?, யார் யாருடைய வீடுகளுக்குப் போவது? என்பது வரையான ஆயத்தங்கள் அமளியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
எங்கள் ஊரில் அனேகருடைய வீட்டுப் பொருட்களும் புதுவருடத்துக்கு முந்தைய நாட்களில் வீட்டு முற்றத்தில் கிடக்கும். வீடு முழுமையாகத் துடைக்கப்பட்டுக், கழுவப்பட்டு, அலசப்பட்ட பின்னர் புது வீடு போல மாற்றம் பெறும்.
அதைவிட, சீனி அரியதரம், முறுக்கு, அச்சுப்பலகாரம், பயற்றம் பணியாரம், காசா, (இதுவும் அச்சுப்பலகாரம் போலவே இருக்கும் நீள்சதுர வடிவத்தில்; ஆனால் பொங்கி வரும்.), லட்டு, இவற்றுடன் இறுதியாகச் சேர்ந்து கொண்ட ‘கட்டிகை’ என இப்படிப் பலவகையான பலகாரங்கள் கடகங்களை நிரப்பும். புதுவருடத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது வீட்டுக்கு வாழைப்பழக்குலை ஒன்று கட்டாயம் வந்து சேர்ந்து விடும்.
இவ்வாறான ஆயத்தங்களோடு புதுவருடம் பிறக்கும் போது, மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
உறவுகள் அனைத்து உறவுகளின் வீடுகளுக்கும் சென்று உண்டு மகிழ்வார்கள்.
நண்பர்களும் அவ்வாறே.
குறைகளை மனங்களில் சுமந்தவர்கள் கூட, அற்ப காரணங்களுக்காக முகங்களைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட, அன்றைய தினம் வீடுகளுக்குப் போய் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதுண்டு.
இவ்வாறாக, புதுவருடமானது, எதிர்வரும் காலத்திற்கான எதிர்பார்ப்புகளுடனும், மாற்றங்களுக்கான ஆயத்தங்களுடனுமாக மலர்கின்றது.
இங்கே, புலம் பெயர் தேசங்களில் இவற்றில் பல வாய்ப்பதில்லை. வேலைகளும், தூரங்களும் இவற்றைப் பல வேளைகளில் அனுபவிக்க முடியாமல் செய்து விடுகின்றன. இந்த இடையூறுகள் சிலவேளைகளில் ஒரு குடும்பம் சேர்ந்து ஒரு நாளை அனுபவிக்க முடியாமல் கூடச் செய்து விடுகின்றன.
ஆனாலும் முழுமையாக இந்நாட்களை அனுபவிக்க, முடிந்தவரை பலர் முயற்சி செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில்,
இசை ஞானி இளையராஜாவின் மலேசிய இசை நிகழ்ச்சியுடன் இரண்டுவகைப் பலகாரங்களைச் செய்து முடித்தேன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துண்ணும் உணவினூடாகவும் பகிர முடியும் என்னும் நோக்கத்துடன்.

நாளைக்கும் நாளை மறுநாள் புதுவருடத்தன்றும் வேலை.
வேலையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தொடர்பு கொண்டால், “பிள்ளை! என்ன பலகாரங்கள் செய்தனீங்கள்?” என்று கேள்வி மீண்டும் வரும். ‘செய்திருக்கிறேன்’ என்று சொல்ல ஆசை.

புதுவருடம் மகிழ்ச்சியைத் தரட்டும் அனைவருக்கும்.
முயல்வோம்!
முடிந்தவரை தளராது செயற்பட முயல்வோம்!

வி. அல்விற்.
30.12.2015.

About admin

Leave a Reply

Your email address will not be published.