Home / வரலாறு / பற்றிமாஜோதி றோமான்

பற்றிமாஜோதி றோமான்

ஆறிஅமர ,நிரந்தரத் துயில்கொள்ள இறைவனிடம் சென்ற எங்கள் மச்சாளே,உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். இன்று,மறக்கமுடியாத ஓர் நாளாகும்.ஆடி 16. எங்கள் மகனாரின் நினைவுதினமுமாகும். என்றும் மறவோம் இந்நாளை.உனக்காகவும் மன்றாட மறவேன்.எங்கள் இரத்த உறவில்,இதுவும் ஒரு பெரிய உறவுதான். இறுதியிலும் ஓர் இணைவு.”

றோமான் மாஸ்ரர்” என்றாலே,தெரியாத பழையவர்கள் இல்லை என்றுதான் சொல்லலாம்.அவர்களின் முதன்மகளாக வந்தவள் நீ. ஊருக்குள் அவர் ஆற்றிய சேவை,ஊரை முன்னேற்றத் துடித்த ஆர்வம் ,அந்த உழைப்பில் கிடைத்த வெற்றி, இவைகளுக்கான ஞாபகச் சின்னங்கள்தான்,ஊறணி வாசகசாலையில் வைக்கப்பட்டிருந்த படங்கள்.றப்பியேல் பப்பா,றோமான் மாஸ்ரர் அத்துடன் கெனடியின் படமும் இருந்தது.அந்தப் படத்தின் காரணம் தெரியவில்லை. இந்த இருவரும் ,முதன்முதல் ஆரம்பிக்கப்பட்ட சனசமூக நிலையத்தின் தலைவரும் செயலாளரும் ஆவார்கள்.

றோமான் மாஸ்ரர் அவர்கள்தானாம் சனசமூகநிலையம் ஒன்று ஸ்தாபித்தே ஆகவேண்டுமென்று, விடாப்பிடியாக நின்று அதற்குரிய வழிவகைகளைத் தேடி ச.ச.நிலையத்தை ஸ்தாபித்தார்களாம்.றோ.மாஸ்ரர் அவர்கள் யாழ் st. Jemes பாடசாலையின் அதிபராக இருந்தகாலம் அதுவாகும்..( ,பிடியரிசி எடுத்து வாசகசாலை கட்டப்பட்டது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் உடனேயோ அல்லது காலந்தாழ்த்திக் கட்டப்பட்டதோ என்பது தெளிவு பெறவில்லை.) அதனால்த்தான் அவர்களின் படத்தை ஞாபகமாக வைத்தார்கள் என்று அறியப் பெற்றேன். அதே நேரத்தில் றப்பியேல் பப்பா அவர்கள், k.k.s town council chairman ஆகவும் இருந்தாராம்.

இந்த வரிசையில்,எங்கள் மச்சாள் பற்றிமாச்சோதியும்,ஊருக்குள் சேவை செய்தார். ஆரம்பப்பாடசாலையின் ஆசிரியராக இருந்தார்.அத்துடன், அந்த நேரத்தில் பல பொதுநல விடயங்கள் நிறைய நடந்தேறின.அதில் மச்சாள் கலந்து கொண்டார்.பேச்சாளராகக்கூடக் கலந்துகொண்டா.அந்தக் காலகட்டங்களில்,மறைந்த மரியதாஸ் அண்ணன் அவர்கள் செயலாளராக இருந்தகாலம். நிறைய நல்ல விடயங்களை ஊருக்குக் கொண்டுவந்தகாலம். எதையுமே மறக்கமுடியாத காலமும் நினைவுகளும். அந்தந்த நேரமெல்லாம் மச்சாள் பங்கேற்பார். மரியதாஸ் அண்ணன் அவர்கள் எல்லாவற்றிற்கும் அவவை அழைப்பார்.அந்தநேரத்தில் ஊரவர்கள் சொல்வார்கள், “தகப்பனின் இடத்திற்கு இவ வந்திருக்கிறா ” என்று. “பத்திமாச்சோதி ” என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.அன்போடும் பண்போடும் பழகுவா.யாரையும் எதிர்த்துப் பேசமாட்டார். யாருடனும் சண்டையே பிடிக்கமாட்டா. அவவை விரும்பாதவை யாருமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஊரிலே தெரியாத ஆட்களோடுங்கூடப் பண்பாகக் கதைத்துவிட்டு,பின்புதான் கேட்பா,”இவையள் யார்” என்று, சுருக்கமாகச் சொன்னால்,குழந்தைகளிலிருந்து முதியவர் வரை எல்லோராலும் விரும்பப்பட்டவர். அந்த நாட்களில் யாரும் யாரையும் பெயர் சொல்லி அழைப்பதில்லை.. (எங்கள் ஐயா “பெரிவள்” என்றுதான் அழைப்பார். றோ.மாஸ்ரரை நேரே அத்தான் என்பார்,யாருக்காவது அவரைச் சொல்ல வேண்டுமென்றால் றோமலத்தான் என்பார். எங்கள் ஐயா மட்டுமல்ல ஊரிலுள்ள அனைவருமே ஒருவர் ஒருவரை முறை சொல்லி முறையோடு அழைப்பார்கள்) .அவ பற்கள் தெரிய சிரித்ததைவிட ,சாதாரணமாகவே முகம் நிறைந்த புன்னகைதான்.இதைக்கூட சொந்தம்பந்தம் இல்லாதவர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இறுதியாக ஓரிரு வரிகள்: இந்தக்கால கட்டத்திலுங்கூட ,றோமான் மாஸ்ரரிடம் படித்தவர்களைச் சந்திக்க நேர்கிறது. நாம் ஊறணி என்றதும்,றோமான் மாஸ்ரரைத் தெரியுமா ? என்ற கேள்வியுடன் ,அவர் தங்களைப் படிப்பித்தவிதம்,அதாவது உத்தியோகம் பார்க்கும் அளவுக்கு ,தங்கள் வீடுவீடாக வந்து, பாடசாலைக்குக் கூட்டிச்சென்று உணவுதந்து படிப்பித்த தங்கள் தெய்வம் என்பார்கள்.அதனால்த்தான் தாங்கள் அவருக்கு சிலையே வைத்திருக்கிறோம் என்பார்கள் குருநகர் மக்கள்.

-இசபெல்லா ரவீந்திரன்

About ratna