ஊறணியில் இன்று – 30.09.2018 இல் நடைபெற்ற கூட்டமானது புதியதோர் மாற்றத்தை – திருப்புமுனையை நோக்கியதாக மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது.
ஊறணியின் எதிர்காலத்தைத் தம் மனங்களில் கொண்ட – வழமையாக பங்கு பற்றும் அதே செயல்த் திறன் கொண்ட 40 ற்கும் மேற்பட்டேnர் இக் கூட்டத்தில் பங்கு கொண்டமை இங்கு நோக்கத்தக்கது.
குரு மனைத் திறப்பு விழாவை மையப்படுத்தியதாக இக் கூட்டம் அமைந்ததாயினும் ஊறணியின் விடுபட்ட அபிவிருத்திப் பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக udo வால் வாங்கத் திட்டமிடப்பட்ட இன்பராணியக்காவின் காணியை விரைவில் வாங்கி அதில் இளைப்பாறு மண்டபம் கட்டுவதை துரிதப்படுத்த வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு அடுத்தடுத்த கூட்டத்தில் மேலும் அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப்படும்.
இனி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பி.ப.4.30 மணிக்கு ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென எமது பங்குத்தந்தை அறிவித்தார்.அதிலும் மாதத்தின் முதற் செவ்வாய்க்கிழமைத் திருப்பலியை சிறப்பான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. இது பங்கு மக்களை மட்டுமல்லாது பிற மக்களையும் எம் ஆலயம் நோக்கி வருவதற்கும் எமது ஆலயத்தை ஓர் யாத்திரைத் ஸ்தலமாக மாற்றுவதற்குமான ஆரம்பத்தை வழங்கும்.
அடுத்து குருமனைத் திறப்பு விழா வேலைப் பகிர்வு வழங்கப்பட்டது. பந்தல், விருந்தினர் வரவேற்பு, விருந்துபசாரம், கலை நிகழ்வுகள் என்பன இதில் அடங்கும்.
எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் ஆலய வழவில் சிரமதானம் இடம்பெறும்.
முக்கியமாக குருமனைத் திறப்பு விழா செலவினத்திற்காக இலங்கையில் வசிக்கின்ற ஊறணி பங்கு மக்களிடமிருந்து குடும்பம் ஒன்றிற்கு 500 ரூபா அறவிடத் தீர்மானிக்கப்பட்டது. வழமை போன்று தங்கள் இடங்களில் உள்ள பிரதிநிதிகளிடம் இப்பணத்தை வழங்கலாம். 7 ஆம் திகதி சிரமதானத்திற்கு வரும் போது யோகராசண்ணாவிடமோ தர்மினியிடமோ இப் பணத்தை வழங்கவும் முடியும்.
வெளிநாடு வாழ் ஊறணி நல்ல உள்ளங்களும் திறப்பு விழாச் செலவினத்திற்காக தங்கள் பங்களிப்பை வழங்கலாம். வழமை போன்று யோகராசண்ணாவின் கணக்கிற்கோ அல்லது தர்மினியிடமோ சேர்ப்பியுங்கள்.
ஊறணி மீண்டும் எம்கரங்களில் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி மீளவும் எம் கரத்தில் கிடைத்தது. இவ் நினைவு நாளை சிறியதோர் நிகழ்வினூடாக கொண்டாடப்படுவதற்கும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
புதிய திருப்புமுனையை நோக்கி அணி திரள்வீர் உறவுகளே. நாம் பிறக்க எம் தாய் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே எம் தாய் மண்ணும். எம் தாய் மண்ணை ஒதுக்குகிறோமோ அது எம் தாயை ஒதுக்குவதற்குச் சமம். சிந்திப்போம் செயல் வடிவம் கொடுப்போம். இது பேசுவதற்கான நேரமல்ல. செயற்படுவதற்கான தருணம்.
“திருப்பு முனையை நோக்கி திரும்புவோம். அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்”.