Home / கட்டுரைகள் / சம்மாட்டியார் என்றொரு மனிதர்

சம்மாட்டியார் என்றொரு மனிதர்

அன்றைய நாட்களில் நம்மூரில்
அரச சேவையில் இணைந்தவர் என

எவரும் இருந்ததில்லை உன்னைத் தவிர
இவரே முதலாவது  அரச பணியாளர்

தந்திப் பரிசோதகராக அரச சேவையில்
காலம் முழுக்க இருந்தாலும்
வாழ்வில் செழித்தோங்க முடியாது- என்று
தத்தழிப்புடன்  நீ எடுத்த முடிவானது
இழங் கால ஓய்வூதியத்துடன்
அப்பணியைத் துறந்தது -நீ
செய்தொழிலை  சீர்படச் செய்வதுவர
வலுவான காரணமாயிற்று

கற்றறிவுடன் பட்டறிவும் கைகொடுக்க
செய்தொழில் கைதேர்ந்து  வித்தகனாய்
நீ தேடிக் குவித்த செல்வங்கள்
ஏராளம் ஏராளம்

செல்வத்தில் பிறந்து
செல்வத்தில் தழைத்து
செல்வத்தில் வளர்ந்து
செல்வாக்குடன் நீ வாழ்ந்தாலும்
பிறர் துன்ப நிலை கண்டு
துவழும் உன் அருள்தனத்தால்
மறைந்தும் மறையாத
மனிதனாகிவிட்டாய்  இன்று

ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பதுகளில்
நான் பிறந்தாலும்
எனக்கு விபரம் தெரிந்த காலம்
அறுபதுகழும் எழுபதுகளும்
அதற்குப் பிற்பட்ட காலங்களுமே

அந்த நாட்களிலே
ஊர்மக்களின் கல்வியறிவை மேம்படுத்த அவர்களை
ஒன்றுபடுத்தி ஒரு வட்டத்தினுள் கொண்டுவர
ஊரில் ஒரு சனசமுக நிலையமொன்று
அமைக்கப்பட வேண்டுமென்று
அந்தநாட் தலைவர்களான
அமரர் இறப்பியேல்
அமரர் றோமான் என்போர்
அயராது உழைத்து வெற்றி கண்டார்கள்
கல்வி அறிவிலும் சக அந்தஸ்திலும்
இவர்கள் இருவருக்கும்
ஏனையவர்க்கும்
இருந்த இடைவெளியால்
சமூக மேம்பாடில்
அவர்களால் தம் இலக்கை
எய்த முடியாது போய்விட்டது

அவர்களின் பின் வந்த தலைவனாக
கல்வி அறிவிலும் சக அந்தஸ்திலும்
அவர்கள் போல் இருந்தாலும்
யாவரினதும்  சுக துக்கங்களில்   பங்குகொள்ளுதலும்
யாவரும் எளிதில் அணுகக் கூடியவராக
எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுபவராக
அனைவருக்கும் இரக்கம் காட்டி
உதவும் மனப்பான்மையில்
அன்றிலிருந்து இன்றுவரை
ஊருக்குத் தலைவனாகிவிட்டாய்

ஊரில் இருந்த  அனைத்துச்  சங்கங்களிலும்
தலைமைத்துவம்  உனது   வசமாய்விட்டது
கிராம அபிவிருத்திச்  சங்கத் தலைவனும்  நீதான்
கடற் தொழிலாளர்  சங்கத் தலைவனும்   நீதான்
புனித  அந்தோனியார் ஆலய    பரிபாலனச் சபைக்கும்
வாலிபச்  சங்கத்திற்கும்
வயோதிபர்    சங்கத்திற்கும்
போஷகர்  தாங்கள்தான்

எத்தனை தலைமைகள் நீ ஏற்றாலும்
எதுவித பெருமைகளும் உன்னிடத்தில் இருந்ததில்லை
எத்தனை மனிதர்கள்    உன்னிடத்தில் வந்தாலும்
அத்தனை  பேரும்  உனைக் கண்டு
ஆறுதலடையாமல் சென்றதில்லை
பேர் கொண்ட   தலைவனாய்
வேர் கொண்டு  தரணியிலே
வெகு  நாட்கள் வாழ்த்திட
ஒரு சிலரே  இன்னுமுள்ளார்  உன்னைப்போலே

இராமன்       ஆண்டாலென்ன
இராவணன்  ஆண்டாலென்ன
இடைஞ்சல்கள்  எனக்கு மட்டும்
இருந்துவிடக் கூடாது என்றோரும்
இதற்குள் தலை  கொடுத்தால்
எனது பாடு திண்டாட்டமாகிவிடும் என
பிறர்க்கு உதவிடும் சந்தர்பங்களையெல்லாம்
மெல்லெனத்  தவிப்பவர்களும்
உரோமை நகரம் பற்றி எரியும் போது
பிடில் வாசித்த நீரோ மன்னன் போல்
தனது  நலனே  குறியாக வாழ்வோரும்
நாட்டில் மலிந்திருக்கும் போது
நீ மட்டும் ஏன் இப்படி
ஊருக்கே உதவுவதற்காக
உருவாகி வந்தவன் போல்
எதோ ஊராரின் உடனடித் தேவைகளை
கவனிக்கக் கடமைப் பட்ட
சட்ட பூர்வமற்ற வங்கி போல்
தனி ஒருவனாகச் செயல் பட்டாய்
ஒரு தினம் ஒரு மாதமா ?
அவசியத் தேவையா ?
அத்தியாவசியத் தேவையா ?
எதற்கும் நீதான் தேவைப்பட்டாய்

பிள்ளைக்குச் சுகமில்லை
பெரியாஸ்பத்திரிக்குப் போகப்
பணம்   வேண்டுமென்றாலும்
உன்னிடத்தில் தான்  வருவார்கள்
மூத்த பிள்ளை வயதுக்கு வந்துவிட்டால்
கொண்டாட்டத்தை தடல்புடலாக
நடத்த வேண்டுமென்றாலும்
நீதான் உதவ வேண்டும்
ஈடு வைத்த காணியும் வீடும்
அறுதியாகப் போகாது மீட்டெடுப்பதற்கும்
நீதான் உதவவேண்டும்
இப்படியாக
திருமண வயதனாலும் சரி
மரணச்   சடங்கானாலும் சரி
ஒரு சில குடும்பங்களில் ஏற்படும்
குறை நிரப்பச் செலவுகளுக்கும்
நீயே தான் உதவி வந்தாய்

இம்மனில் பிறக்கின்ற  ஒவ் வொருவரும்
இறக்கின்ற காலம் வரையில் – மற்றவர்க்கு
இயன்றதைச் செய்திடல் வேண்டும் -எனும்
இணையில்லா இலட்சிய தாக்கத்துடன்
இசைந்து வாழ்ந்த ஓர் அற்புதத் தலைவன் நீ

எதனை மனிதர்கள் பிறந்து வந்தாலும்
எம்மூர் செல்வன் உனக்கு ஈடாகுமா?
எமது ஊருக்கு மட்டுமல்ல
அதன் சுற்றயல் ஊர்களுக்கும்
உத்தம சரமாகவே
இருந்து வந்தாய் பல்லாண்டாய்

சம்மாட்டியார் என்றொரு மனிதர்
இல்லாதிருப்பின் – இவ்வூர்களில்
“பல பேர் வேரற்று  வீழ்ந்திருப்பார் என்றோ ”

இவ்வாறான உன் இயல்பினால்
ஊராரின் மனங்களிலே
இரண்டறக் கலந்து விட்டாய் -நீ
வக்கற்று வகையற்று
வருவோருக்கு மட்டுமல்ல
இருக்கின்ற செல்வத்தினை
இன்னும் பெருக்க நினைப்பவரும்
உன்னிடமே வந்தார்கள்

இவ்வாறு காலங்கள் நடைபயில
தமிழ் மொழியின்  வரலாற்றில்
சங்க காலம் சங்கம்  மருவிய காலம் போல்
எண்பதுகளின்    முற்பகுதியானது
எம்    ஊருக்கும்   பொற்காலமாக
ஓர்   இளவேனிற்   காலமாக
விளங்கி வந்தது

எமது ஊரின் தாய்ச் சங்கங்கமான
கிராம அபிவிருத்திச் சங்கம்
செழித் தோங்கிய காலம்
நாட்டுக் கூத்துக்களும் நவீன நாடகங்களும்
பற்பல  விளையாட்டு  நிகழ்ச்சிகளும்
சிறந்து விளங்கிய காலம்
கடல் வளம்  வஞ்சகமின்றி
நம்மவர்க்கு  வழங்கிய காலம்
உள்ளுர்ப் போக்குவரத்தும்   தூரப் பிரயாணங்களும்
மிக இலகுவாகவும் விரைவாகவும்
இருந்த  காலம்
ஊறணியில் எல்லோரும் ஒருமைப் பட்டு
ஒன்றித்திருந்த காலம்
எமது ஆலய பங்குத் தந்தையாக
புதிதாக வந்திருந்த அருட்திரு தேவராஜன்
அரும் பணியாற்றிய காலம்
இவற்றிற்கும் மேலாக
புனித அந்தோனியாரின்
பழமை வாய்ந்த ஆலயத்திற்குப் பதிலாக
புதியதொரு ஆலயத்தை
ஊர் மக்கள் எல்லோரினதும் வியர்வையுடன்
கட்டியெழுப்பிய காலம்

நாமெல்லோரும்  ஒன்றுபட்டு
ஆலயத்தைக்  கட்டி   எழுப்ப
அது  எம்மை  இன்றுவரை -ஓர்
கட்டுக்கோப்பில்  கட்டி  எழுப்பி
அதுதான்  உலகெங்கும்  சிதறுண்டு
வாழும்  எங்களை  ஓர்    உணர்வாய்
ஒன்றுபடுத்திய இன்று  வாழும்  அநேகர்
இதற்குச் சாட்சி

சந்தேகத்திற்கு   அப்பாற்பட்ட   தலைவர்கள்
சாதாரண மனிதர்கள் மனிதர்களாக
உனது கருத்தினை ஏற்றுக்கொள்ளாதவர் கூட
எதிர்த்து நிற்காத  காலம்

அந்நாட்களில் எமது பங்குத் தந்தை
அருள்திரு தேவராஜனின் பங்களிப்பு
மக்களோடு மக்களாகப் பழகி
எம்மை வழிகாட்டிய விதம்
எமது முன்னேற்றத்திற்கும் நன்மைக்கும்
ஆலய வளர்ச்சியில்  காட்டிய ஈடுபாடும்
பல விதங்களில் உன்னோடு
தோளோடு தோள் நின்று
உழைத்த உழைப்பும்
நம்மூரின் அபிவிருத்திக்கு காரணமாயிற்று
நமது தாக்கங்கள் எதிர்ப்பாடுகளின்போது
ஓடிவந்து   தேடிவந்து அதைத்
தகர்த்தெறிந்து  எம்மைப் பாதுகாத்து
வந்ததை நாம் மறக்க முடியாது

எமது பங்கை விட்டு பிரிந்து இவர்
வெளிநாடு செல்கையில் -இவருக்கு
நாம் எடுத்த பிரியாவிடை விழாவின்போது
ஹென்றி பாடிய கவிதை -இன்று
பலருக்கும் நினைவிருக்கலாம்

“அம்மா அடித்தாலும்
ஆமி பிடித்தாலும்
அறை வீட்டையல்லவா
நாடி வந்தோம்
ஆதரவு  அழிப்பீர்
அரவணைப்புத்தருவீர்  என்று  “”
“இனி  என்று  வருமோ  இக்காலம் ”

ஆனாலும்  அவர்  எமது  மக்களை
விட்டு   எங்கும்  போய்  விடவில்லை
மேற்கு ஐரோப்பிய  நாடுகளில்
புலம்  பெயர்ந்து   வாழும் –
எம்  ஊர் மக்களுடன்
தொடர்ந்தும்  ஈடுபாட்டுடன்
பழகி     வருக்கின்றார்
ஊரின்    வளர்சிக்காக
சம்மாட்டியார் தலைவர்
இவருக்குப் பங்குத்தந்தை
ஒத்துழைப்பு
ஊரின் வாலிபர்களை வழிநடத்த
அமரர் ஜோசெப்பும்
அமரர் ஞானமணியும்
ராசமணியும்
இவருக்கு எப்பவும் பக்கபலமாய்
இருந்து   வந்தார்கள்
எண்ணத்தில் கருத்து வேற்றுமைகள்
அவ்வப்போது  ஏற்பட்டாலும்
செயற்பாட்டில் சம்மாட்டியாருக்கு
பக்கபலமாகச்     செயற்பட்டவர்ற்குள்
முக்கியமானவர்களாக   இருந்தார்கள்

ஆலய வழிபாடாக இருக்கட்டும்
ஆலய  கட்டிட வேலைகளாகட்டும்
அருளப்பு ,அருமைத்துரை
ஞான செல்வம் போன்றோர்
ஆற்றி   வந்த    பணியானது
அளப்பெரிதாகவே விளங்கிற்று

இவர்கள் அனைவரின் கூட்டணியானது
இணையற்ற கூட்டமைப்பாய்
இது போல  ஒரு கூட்டமைப்பு
என்றுமே  ஏற்பட    முடியாது
என்ற விதமாய்  அமைந்திருந்தது

தலைவர்  இவரின் தலைமைத்துவமும்
பங்குத் தந்தையின்  வழிநடத்துதலும்
பங்கு மக்களின் உழைப்பும்
ஒரு சிலரின் பொதுநலப் பங்களிப்பும்
சேர்ந்து  ஆலயத்தைக் கட்டி முடித்து
அப்பாடா என்று தலைநிமிர்வதற்குள்
பல காலமாக நடை பெற்று
வந்த உள்நாடுப் போர்
விஸ்வருபம் கொண்டதினால்
சொந்த  ஊரிலேயே  இடம் பெயர்ந்து
நாடளாவிய  ரீதியாக  மட்டுமல்ல
உலகளாவிய  வகையில் சிதறுண்டு
அங்கும் இங்கும்  நாம்  வாழ்கின்றோம்

நம்  முன்னோர்களின் தவ வலிமையாலும்
அந்தோனி முனியோரின் பரிந்து பேசுதலினாலும்
இறையுலகோனின் இரக்கப் பார்வையினால்
சிதறுண்ட நாம் சிதைவடைந்து போகவில்லை
கோடி அற்புதரின் மன்றாட்டினால்
குவலயத்தில் குறைவேதுமின்றி
வாழுகின்றோம்

ஊரார்  கொண்டாடி மகிழ்ந்த
இளவேனிற்  காலத்திலே
நாடகம் ஒன்று நடத்த விழைந்தேன்
அதிலே  வில்லத்தனமும்   வில்லங்கத்தனமும்
கொண்ட   பாத்திரமாக
சம்மாட்டியார்  என்றொரு  பாத்திரம்
ஊரிலே பலபேர்   கிளர்ந்தெழுந்தனர்
சம்மாட்டியாரைக்  குறை  சொல்லும்
நாடகத்தை  நிறுத்து  என்று
நீண்ட  சமரசத்தின்  பின்
சம்மாட்டியார் என்ற பாத்திரத்திரம்
முதலியார்    ஆயிற்று  நாடகத்தில்

இவரின் துணிகரச் செயலுக்கு
சாட்சி  பகரும்  இந்நிகழ்வை
சொல்லித் தான் ஆகவேண்டும்
செல்வாக்காக நடை பெற்று வந்த
கிராம  அபிவிருத்திச்  சங்கமும்
அதன் பலனை  அனுபவித்து வந்த
ஊர் மக்களும் மகிழ்வுடன்
வாழ்ந்திட்ட தருணத்தில் ஓர் நாள்
மாபெரும்   கொள்ளைக்குத்  திட்டமிட்ட
திருடர்களின்   கைவரிசை
உன் வீரச் செயற்  பாட்டால்
தவிடு     பொடியாய்யிற்று
இவரின்  இத்தீரச் செயலால்
தப்பியது  சங்கம் மட்டுமல்ல
நம்   ஆலையமும் இ  பங்குமக்களும்தான்
இப்படிப்  பல   அனுபவங்கள்
இந்த  இளவேனிற் காலத்தில்
இங்கு அரங்கேறியது
இறைவனும்   நம்மோடே  அந்நேரம்
இருந்திருக்கின்றார் என்பதனை சான்றுகின்றது

இருந்தும்  என்ன   பயன்
தொடர்ந்து  வந்த  போர்ச் சூழலினால்
அன்றைய வளர்சிக்களெல்லாம்
இளவேனிற்  காலத்துடன்
வேர் கொண்டது போல்
நின்று விட்டது
ஊர்  மக்களும்
மூலைக் கொருவராக
உலகெங்கும்  சிதறி விட்டார்கள் -ஆனால்
இடங்களால் வேறுபட்டாலும்
மனங்களால் ஊர்  உணர்வால்
ஒன்றாகவே  வாழ்ந்து  வருகின் றார்கள்

வாழ்வோர்கள்  எல்லோரும்
தேவர்களோ  முனிவர்களோ – இல்லை
சாதாரண மனிதர்கள்  தானே !
அதனால்  அவ்வப்போது
சண்டை  சச்சரவுகள்  வருவதுண்டு
அவைகள் தானாகவே  வருவது  போல்
தானாகவே போய்விடும்

நாளை  பிறக்கும்   நமக்கோர்  நல்வாழ்வு
எனும்  வெறும்  நம்பிக்கையில்
ஈர்  பத்து  வருடங்கள்
கழிந்து விட்டன

எல்லோரும்  இடம் பெயர்ந்ததுபோல்
இவரும்  அவ்வப்போது இட ம் பெயர்ந்தே வந்துள்ளார்
மாதகலில்     சிலகாலம்
அராலியில்  சிலகாலம் -அதன்பின்
வவுனியாவிலும்  அதைத் தொடர்ந்து
மட்டுநகரில்  இப்படியே
இவரின்  வாழ்வும்   தொடர்ந்தது

எங்கு    இடம்பெயர்ந்தாலும்
இவரைத்  தேடி வருபவர்  பலருண்டு
தேடிவர  முடியாத   தூரத்தில்
இவரின் நலம் குறித்து
விசாரிப்பவரோ இன்னும் பலர்

தலைவரைப்  பார்க்க  வருபவர்களும்
சம்மாட்டியாருடன் கதைக்க வருபவர்களும்
காசு பணத் தேவையுடன் வருபவர்களும்
காரணமே இல்லாது காணவருபவர்களும்
பழைய  காணி உறுதி கேட்டு வருபவர்களும்
இப்படி நாளாந்த சந்திப்புக்கள்  ஏராளம்

ஊருக்கு என்றும் தலைவனாய்
சுற்றயல் கிராமங்களுக்கு சம்மட்டியாராய்
எப்போதும் செல்வாக்காகவே
உன்  வாழ்க்கை  அமைந்து  விட்டது
பசுமைப்  புரட்சியைக் கேள்விப் பட்டிருக்கின்றேன்
சிவப்புப் புரட்சியைக்  கேள்விப் பட்டிருக்கிறேன்
ஆனால் எளிமைப் புரட்சியை
உன்னில்  தான்   பார்த்திருந்தேன்
ஆடம்பரங்கள் ஏதுமற்ற  வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்கள் தவிர
வேறு ஏதும் உன் வீட்டில்  இல்லை
வெளியிலும்  இருக்கவில்லை
காலமறிந்து  தேவையறிந்து
உதவிடும்   உளப்பாங்கிற்கு   மட்டுமல்ல
உன்  எளிமை   வாழ்வும்
உனக்குப்  பெயர்  தேடித் தந்தது

கொடுத்து   வாழ்ந்தோரை
கொடுத்துவைத்தவர்கள் -என்றும்
நல்லவர்க்கெல்லாம்
நல்லதே   நடக்கும் -என்றும்
முன்னோர்கள் சொல்லி  வைத்தது
உன் விடயத்தில்  உண்மையாயிற்று

மாதம்  முடிந்தால் பென்சன்
மணி  அடித்தால்   சாப்பாடு
சாப்பிட்டபின் சுருட்டு
பொழுது  போக்க வ  எ
வேண்டும்  பொருளை வாங்கிட
பக்கத்திலேயே கடை
தனி அறை   தனிக்  கட்டில்
சுகமான   நித்திரை
அதிகாரம்   செய்ய
இன்னும்   உனக்குப்  பயப்படும்
மகள்  பவளி
உன்  வயதில் உள்ளோர்
பேச்சுத்துணையாக அருகில்  இல்லை
என்னும்    குறையைத்   தவிர
வேறு   எந்தக்  குறையும்
உனக்கு    இருக்கவில்லை

உள் நாட்டுப் போரினால்
ஊர்மக்கள்   அங்குமிங்கும்
தறிகெட்டு  வாழ்கையில்
நீ  மட்டும் வாய்ப்பான -ஓர்
இடத்தில்   அமர்ந்து   கொண்டாய்
எந்தச்     சந்தர்ப்பத்திலும்
வாழ்க்கை   உனை   வளப்படுத்தியே
வந்து  கொண்டிருந்தது

கொடுத்து   கொடுத்து   வாழ்ந்ததினால்
யாரிடமும் எதுவும்  உதவி வேண்டாத உறுதி
உடல் தளர்ந்தாலும்  உறுதியான எண்ணம்
சொந்தக்  காலிலேயே   இறுதிவரை  வாழ்ந்த  மிடுக்கு
யாருக்குக்  கிடைக்கும் இப்படியொரு வாழ்க்கை
உனக்குக்  கிடைத்தது  எனக்குக்   கிடைக்குமா ?
மழையைப்    போல  பனியைப்  போல
அது   இறைவன்  அளிக்கும்  வரமல்லவா

எளிமையாய்   நீ   வாழ்ந்ததினால்
ஏறிட்டான்   இறைவன்  அன்றே
வெள்ளிக் கிழமை  தோறும் வீடு  தேடி
வந்தது   தேவ நற்கருணை
வேண்டிய  போதே  உனக்குக் கிடைத்தது
ஆண்டவரின்    அருள்     அடையாளம்

எங்கோ  பிறந்து
ஏற்றம்  பெற்று  வாழ்ந்து
எல்லோரின்  மனங்களிலும்
ஏற்றாத   விளக்காகி
எரிகின்ற  கனலாகி
ஊற்றாகி உணர்வாகி
நெஞ்சக்  கீற்றாகிக் கிளைவிட்டாய்.

-அமரர் தவஞானதாஸ்

About admin

Leave a Reply

Your email address will not be published.