ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி.

ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆச்சி மட்டும் தான். அந்தக் காலத்திலே ஆறாம் வகுப்புப் படித்தவர். தமிழ் இலக்கணச் சூத்திரங்களும், திருக்குறள்களும் மற்றும் பல நூல்கள் பற்றியும் அந்த வயதிலேயும் ஒரு பிழையும் இல்லாமல் ஞாபகமாகச் சொல்லிக் காட்டுவார். பழைய கதைகள் நிறையச் சொல்லுவார். சீலனுக்கும் மற்றும் அவனது நண்பர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தன்னுடைய ஆச்சியைப் பற்றிப் பெருமையாக எண்ணிக் கொள்ளுவான். தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ளுவார். தனக்குப் பிடிக்காத விடையங்கள் ஏதாவது வீட்டிலே நடந்தால் புறுபுறுத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயுமாகத் திரிவார். பிறகு வாசல் படியிலே வந்து குந்தியிருந்து விடுவார். வீட்டிலே அண்ணா அக்காமார் இருந்தும் இவன் கடைக்குட்டி என்பதாலேயோ என்னவோ ஆச்சிக்கும் இவனைப் பிடிக்கும். சாப்பாடுகளை இவனுக்கு மட்டுமே ஒழித்து வைத்துக் கொடுப்பார் ஆச்சி. சீலன் இரவிலே ஆச்சியைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் படுப்பான்; அம்மாவைத் தேட மாட்டான். ஐயாவுக்கும் (அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவான்) அம்மாவுக்கும் கூட ஆச்சியிலே நல்ல விருப்பம். ஆனால் ஆச்சி தொணதொணக்கும் சமயங்களில் “சும்மா பேசாமல் இரணை” என்ற ஐயாவின் உறுக்கலில் ஆச்சி பெட்டிப் பாம்பாக அடங்கிப் போவார். அப்போது பார்க்க பாவமாக இருக்கும் அவனுக்கு.
அம்மா எப்போதாவது தான் மிகவும் அவசரமாக வெளியே செல்லும் தருணங்களில் ஆச்சியைச் சமைக்கச் சொல்லும்போது மிகச் சந்தோஷமாகச் சமையல் செய்வா. எங்களுக்கும் ஆச்சியின் சமையல் நல்ல விருப்பம். எல்லாக் கறி வகைகளையும் நல்ல பிரட்டல் கறிகளாக வைப்பா ஆச்சி. ஆறு பேர் உள்ள சீலனின் குடும்பத்தில் மூன்று பேருக்கான கறிதான் ஆச்சி சமைத்த கறிச் சட்டிக்குள் இருக்கும். பிறகென்ன அதற்கும் வந்து அம்மா “ஆம்பிளையள் இருக்கிற வீட்டில கொஞ்சம்  உண்டனக்  கறி வைக்கப் படாதோ” என்று தொடங்குவா.
காலங்கள் உருண்டோடிக் கொண்டிருக்க சீலன் இளைஞனாகி ஐரோப்பிய நாடொன்றுக்குள் தஞ்சமடைந்து கொண்டான். இடப் பெயர்வுகள் தொடங்கின. அண்ணா, சீலன், அக்கா என்று எல்லோருமே நாட்டை விட்டு வெளியேறி விட, அங்கே இருந்த ஒரு அண்ணாவுடன் ஐயா, அம்மா, ஆச்சி சேர்ந்து இருந்தார்கள். ஆச்சிக்கு இப்போது கண்கள் மங்கி தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அம்மாவுடைய உதவியுடனேயே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தா என்று அறிந்த போது சீலனுடைய மனம் ஆச்சிக்காக அழுதது. ஆச்சியின் தொண தொணப்பு குறைந்து போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
எங்களுடைய இடப்பெயர்வு ஒன்றா இரண்டா? ஓரிடத்தில் போய் இருப்பதும், பிறகு தூக்கிக் கொண்டு மற்ற இடத்துக்கு ஓடுவதும், பிறகு அங்கேயிருந்து கிளம்புவதுமாக ஓட்டமே வாழ்க்கையாகி எல்லோரையுமே நலிய வைத்து விட்டது. ஓடும் போது அண்ணன் தன்னுடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் மட்டுமே கவனிக்கக் கூடியதாக இருந்தது. ஐயாவும், அம்மாவும், ஆச்சியும் அவர்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். ஆச்சியால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டபோது ஐயா தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார். இதைக் கேள்விப் பட்ட சீலனுக்கு துக்கம் தாள முடியவில்லை. ஏனென்றால் ஐயாவுக்கே 72  வயதைத் தாண்டியிருந்தது. அம்மாவுக்கு நீரிழிவு நோய் என்று சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றியிருந்தன.
சீலன் தன்னால் முடிந்த அளவுக்கு பணத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. இடையில் ஒரு தடவை அம்மாவுடன் தொலை பேசியில் பேசும் போது, “அம்மா உங்களுக்கு உதவிக்கு யாரையாவது ஒழுங்கு செய்யட்டுமா?” என்று கேட்டான். ஒரு சில வினாடி மவுனத்திற்குப் பிறகு “உனக்கு மட்டும்தான் ஆச்சியோ? அவ எங்களுக்கும் ஆச்சிதான், கடைசி மட்டும் நாங்கள் தூக்கிக் கொண்டு ஓடுவம்” என்று பதில் சொன்ன போது, எல்லோரும் ஆச்சி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து கண்ணீரே வந்தது. ஆச்சியோடு தொலை பேசியில் கதைக்கவும் முடியவில்லை. அவவுக்கு இவன் கதைப்பதை கேட்கவே முடியாத நிலைமை ஏற்பட்டு இருந்தது. சில நாட்களில் ஆச்சி படுத்த படுக்கையாகி அதிகம் அழுந்தாமல் போய் சேர்ந்து விட்டார். சீலன் கண்ணீர் விட்டு அழுதான். மூப்பும், இறப்பும் இயற்கைதான்; ஆனால் உறவுகளைப் பிரிந்து  நாடோடிகளாக அலைந்து சோர்வுண்டு, அதனாலேயே நோய்வாய்ப் பட்டு இறப்பது  இயற்கைக்கு முரணாகப் பட்டது சீலனுக்கு. எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்தது பிழையோ என்ற குற்றவுணர்வு குத்தியது. ஆச்சி இறந்த கொஞ்சக் காலத்திற்குள் ஐயாவும் நோய் தாக்கி இறந்து போனார். இப்போது இருப்பது சீலனுக்கு அம்மா மட்டுமே!

About admin

Leave a Reply

Your email address will not be published.