ஆழிக்கடலினிலே ,ஆழ முக்குளித்து , மகிழ்ந்தெடுத்த எங்கள் முத்தே ! எமக்கு வரமாய்க் கிடைத்த சொத்தே , இறைவன் தந்த இசையரசியே ! நெய்தலின் தென்றலில் கலந்திட்ட எங்கள் லீலி மலரே !
கோடி அற்புதராம், எங்கள் சந்தணப்புனிதராம் அந்தோனியாரின் வேண்டுதலால் ஊறணிக்குக் கிடைத்த பொக்கிஷமே ! இசைத் தென்றலே !
புனிதனவன் கையமர்ந்த இறை யேசுவின் ஆசியும் நிறைவுற ,அற்புதனின் கையிருக்கும் லீலி மலரை, எம்மவளுக்கும் சூட்டி ,இறைபணிக்கென அழைத்தெடுத்து, தேனிசைக் குரலால் விண்ணோரையும், மண்ணோரையும் ஈர்த்தெடுத்து ,மண்ணுக்கும், விண்ணுக்கும் வித்தகியாகிவிட்டா எங்கள் “லில்லி “சிஸ்ரர் .
சிஸ்ரர் அவர்கள், பாடலில் உள்ள அத்தனை நுட்பங்களையும், சங்கதிகளையும்,மிகத் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கண்டிப்போடும், கடமையுணர்வோடும்,ஆழுமையோடும் “தன் ஊர்” என்ற மிடுக்கோடுந்தான் கற்றுத்தந்தவ !ஆனால் அந்த நேரத்தில் எமக்குப் பயந்தான் அதிகம் !(கிட்டத்தட்ட 1981 ல் !) அதனால்த்தான், எம்மால் தனித்து பாட்டுப் படிக்க முடிந்தது ,! நான் சொல்லும் தனித்து என்பதின் அர்த்தம், எமது ஊருக்கு சிஸ்ரர் வந்ததின்பின் fr அன்ரனி பாலாவைத் தவிர யாரும் எமக்குப் பாட்டுப் பழக்கியதே இல்லை ! அவவுக்கு வேறு ஆட்கள் வந்து பாட்டுப் பழக்குவது விருப்பமில்லை. காரணம் அவர்கள் தமது சுகத்திற்காகவும் பாடகர்களின் சுகத்திற்காகவும் பாட்டின் நுணுக்கங்களை, இராகங்களை சிலர் மாற்றி அமைப்பதனால், தன்னூரவர்கள் அப்படிப் பாடக்கூடாதென்பதில் மிகவும் கரிசனையோடும் கவனத்தோடும் இருப்பா ! அது அவவுக்கு மதிப்புக் குறைவுதான்! ஒருமுறை சிஸ்ரர் அவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்ற போது ,ஆனித்திருநாள் வரப்போகிறது இம்முறை சிஸ்ரர் இல்லையே ! என்ன செய்வதென்றே தெரியவில்லை !என்று நினைத்தபோது,
அந்த நேரம் கிச்சிமாமாவிடம் பாட்டுக் கசற் அனுப்பி, கிச்சிமாமா பழக்கி ,நாம் புதிய பாட்டுப் படித்தோம். அதன் பின் வந்த திருநாட்களுக்கு original castte எடுத்து , original ஆக ப்பாடுவோம். எம்மவர்களுக்கிடையே திறமைசாலிகள் இருக்கிறார்கள்தானே !இந்தவகையில் சில, பாட்டு இடங்கள் பிசகினாலும் றூபன் விடமாட்டான். “இல்லை இது இப்படித்தான், இப்படித்தான் சிஸ்ரர் சொல்லித்தந்தவ”என்று விடமாட்டான்.சின்னச்சின்ன நுணுக்கங்களையெல்லாம் கவனமாகக் கருத்தில் கொள்பவர்கள். .ஆர்மோணியமாய் இருந்தாலென்ன பிழையைச் சரியென்றோ , ஒருமாதிரிச் சமாளிச்சோ போக முடியாது ! ஆனால் சிஸ்ரரிடம் யாரும் கதைக்கமாட்டோம்.ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பின்தான் அதை உணர முடிந்தது , எத்தனைமுறை கலைபட்டிருப்போம் . அவ நினைச்சமாதிரி நாம் பாட வில்லையென்று !கொப்பி இல்லாமல் போகமுடியாது !இப்போ தொழில் நுட்பங்கள் நிறைந்த காலம் !அப்போ ஓடியோ கசெற்றைப் போட்டு நிற்பாட்டி நிற்பாட்டி ஒராள் இரண்டுபேர் சரியாக எழுதி அதை சரிபார்த்து பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுப்பது , (இதில் மறைந்த செல்வியை மறக்கவே முடியாது. எழுத்துப்பிழையின்றி,அச்சுப் போன்ற எழுத்தாக எழுதுவாள் .)இப்படியாக சில வேளைகளில் தகவல் சொல்லி அனுப்புவா சிஸ்ரர் !அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும், அவர்களும் குறித்த நேரத்தில் வந்து சேருவார்கள்.இப்படியாக ஒவ்வொன்றும் அடுக்கிக் கொண்டே போகலாம்,ஆனாலும் ஊறணிக்குக் கிடைத்த பெருங் கொடைக்கலம் இவ ! .
சிஸ்ரர் அவர்களின் முதல் வருகை !
(ஊறணிக்கு !பாடகர்குழாமுடன் )
அழிக்கமுடியாத அகற்றமுடியாத நினைவலைகள் !!!
அன்று சனிக்கிழமை ,பாடசாலை விடுமுறைநாள் ! ஆதலால் தன்னூருக்கு வருகிறா !தன் பெற்றோரை, உறவுகளைச் சந்திக்கவும் , தன்னூர்த் திருநாளைக் காணவும் வருகிறா! அதுவும், நேரே பஸ்ஸில் வந்து கோவிலடியில் இறங்குகின்றா ! பஸ்சால் இறங்கியவுடனேயே அசந்துபோய்விட்டா ! தனக்கு நம்பவே முடியவில்லையாம் ! இது ஊறணியா, ஊறணியிலா ?அவ்வாறாக அலங்கரிக்கப் பட்டிருந்தது, கோவில் வெட்டை ! இது இவ்வாறு இருக்க,கோவிலடியில் , நற்கருணைப் பவனிக்காக அலங்கரிக்கப்பட்ட தேர் ! இவைகளையெல்லாம் பார்த்ததும் , அவவுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பு,!!, எனக்குக் காட்சிகளாக வந்து போகிறது .
இது இவ்விதம் இருக்க, நாங்கள், பாட்டுப்பழகிவிட்டு வீட்டுக்குப் போகும் நேரம். அதாவது ,அன்று 12 ந்திகதி, மாலை வழிபாட்டுக்குரிய பாடல்களை மேலோட்டமாகப் பார்த்தோம் . நான்கு மணிக்கு கூடு தூக்கப்படும், ஆறு மணிக்குப் பூசை ஆரம்பம்.. பிள்ளைகள் நிற்கமுடியாது .உடனே சிஸ்ரர் சிலரை, ,கிட்ட உள்ளவர்களை மறித்து தான் படிப்பதை திருப்பிப் படித்தால் போதும் என்று சொல்லி, பழக்கிப் படித்த பாடல்தான் “உன்திருயாழில் ” !!!
அவவின் குரலுக்கும் அந்தக் கோவில் வெட்டையில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியின் ஊடாக “கணீர்” என்ற, அந்த வெண்கலக் குரல், ஊரெங்கும் கமழ்ந்து மணந்து செவிப்பறைகளில் உறைந்தே விட்டது.,அத்தனை ஊரவர்களுக்கும்,ஒர் சிறிய ஆனந்தத் தலைக்கனந்தான் ! அதில் பெருந்தவறில்லை ! இன்று அவ மறைந்தாலும், அவவுடைய குரல், மக்கள் மனங்களைவிட்டுப் போகவே இல்லை ! இவதான் எங்கள் லில்லி சிஸ்ரர்!! பின்பு, ஊறணிக்கு அடிக்கடி வருவதும், பாட்டுகளைப் பழக்குவதுமாக, எம்முடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தா ! சிஸ்ரர் அவர்கள் ஊறணிக்கு , தன் பெற்றோரைக் காண வந்தாலுங் கூட, மற்றவர்களின் பார்வை வேறு. குழந்தையிலிருந்து முதியவர்வரை தகவல் தருவார்கள், “லில்லிச்சிற்றர் வந்திட்டா , பஸ்ஸால றங்கிப் போறா ” என்று . இதுதான் எம் ஊர், உறவு, !
இன்னுமோர் பதிவு !
அவ எப்பவும், நோட்ஸ் புத்தகத்துடனேயே வருவா !பாட்டுக்களை எடுப்பதென்றால் ஒருவரும் படிக்காத பாட்டைநாம் முதலில் படிக்க வேண்டும் என்பதில் அவ குறியாக இருப்பா !அதற்காக அவ என்ன செய்வா என்றால், (நோட்ஸ் புத்தகத்தில் பாட்டுடன் ராகமும் தாளமும் எழுதப்பட்டிருக்கும்).அந்த இராகத்தில் அழகிய ராகத்தைத் தெரிவுசெய்து, அதை ஆர்மோணியத்தில் வாசித்து,சரியெனக் கண்டவுடன் எமக்குப் பழக்குவா ! இதற்கு எமக்கு எவ்வளவு பொறுமை வேண்டும் தெரியுமா ? இவையெல்லாம் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு அனுபவங்கள் ,!இந்தவகையில் எனக்கு மறக்க முடியாத பாடல், “எனக்கு என்றும் இடமுண்டு,எந்தன் யேசுவின் இதயத்திலே ” ஒவ்வொரு சங்கதிகளும், அசைவுகளும்,தட்டி எடுத்தலும் இன்றும் என் மனதைவிட்டு அகலாத பாடல்.இப்பவும் இங்கு பூசையில் பாடுவேன்.ஆனால் யாருக்கும் தெரியாத பாடல் !
ஒருமுறை,அவ ஊறணிக்கு வந்த நேரம், 12ந்திகதி மாலை நேரம்.பாடசாலை முடித்துத்தானே வரவேண்டும் . பிந்தி வந்தும் ,வழிபாடு முடிந்த பிற்பாடு, அதிலேயே ஒருபாடல்பழக்கி மறுநாள் காலையில் 13ந்திகதி பாடிய பாடல் “இசையிலே என் இறைவா” என்ற பாடல் !அந்தப் பாடலைத் தெரிந்தவர்கள் படித்துப் பாருங்கள் “உன்பகழ்பாட ” என்ற இடமொன்று வரும், அதை எப்படிப் படித்தோமென்று , இதேபோல் “ஆண்டவர்தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள்” என்ற பாடல் ! இது மூன்று இடங்களில் ராக தாளங்கள் மாறிவரும் ! அம்மாடியோ! சொல்லிக் கொண்டே போகலாம்.கூடுதலான விஷயங்கள் ஒரளவு எனக்குத் தெரியும்.எல்லாமே காட்சிகளாக நிற்கின்றன!கொஞ்ச றாங்கித் தனமும் உண்டுதான். அதை ஒன்றும் செய்ய முடியாது !அதுதான் அவவை மேலேமேலே வளர்த்ததோ தெரியாது !எல்லாமே தரமாக இருக்கவேண்டுமென்று செயல்பட முனைபவ ! யாரும் குறை சொல்லுமளவிற்கு இடமளிக்கமாட்டா !
எது என்னவாக இருந்தாலும் இறைவனின் திரு யாழில் பண் தரும் சிறிய நரம்பாகிப் பண்ணிசைத்த பாடகியே! இசைக்குயிலே உங்கள் இறுதிப் பயணத்திலும் , உன் புகழ் பாடி உங்களை வழியனுப்பி வைக்கும் பாக்கியமே நாங்கள் உமக்குத் தரும் நன்றிக்கடனாகும் . எமது பிள்ளைகள் உம் பெயர் சொல்ல , உமது பண் தரும் நரம்பு இறைவனில் இசைமீட்டட்டும்!
-இசபெல்லா இரவீந்திரன் (இரத்னா)