எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம்.
எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு இருந்தது. வலது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில எங்கட ஊருக்குச் சொந்தமான(?) சேமக்காலை ( எங்கட ஊரில ‘சவக்காலை’ எண்டு சொல்லுவினம்) இருந்தது. அதக் கடந்துதான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும். நடந்து போகேக்குள்ள நெஞ்சு “பக்குப்பக்கு” எண்டு அடிக்கும். அந்தப் பக்கத்தால போக மாட்டன். வீட்டில இருந்து காங்கேசந்துறைக்கு நடக்க வெளிக்கிடேக்க சேமக்காலைக்கு கிட்ட வர றோட்டைக்கடந்து தலையை மற்றப் பக்கம் திருப்பிக் கொண்டு விறு விறு எண்டு அந்த இடத்தைக் கடந்திடுவன். மனதுக்க “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராட்சியம் வருக…… ஓட்டோமற்றிக்காக ஓடத் தொடங்கும். பிறகு அந்த இடத்தைக் கடந்து கன நேரத்துக்குப் பிறகுதான் மூச்சு சீரா வரும். அந்த சேமக்காலைக்குப் நேர பின்னாலதான் என்ர சிநேகிதி அன்ரனீற்றாவின்ர வீடு இருக்கு. அன்ரனீற்றா சிநேகிதி மட்டுமில்லை, எங்கட உறவும் கூட. அவையின்ர வீட்டை அடிக்கடி போய் வருவன். அவை அந்த வீட்டில் என்னெண்டு வாழுகினம் எண்டு அடிக்கடி நினைச்சுக் கொள்ளுவன்.
உயிரோட இருக்கேக்குள்ள மனுஷன், அந்த உயிர் தன்ர பயணத்தை முடிச்சுக்கொண்டு வெளிக்கிட்டிட்டா பிணம். வாழ்க்கை இவ்வளவுதான். இதுக்குள்ள ஓராயிரம் சட்டங்கள், விதிமுறையள், வீம்புகள் எல்லாம் அந்தப் பயண வீதியில உருக்கொண்டு ஆடும்.
இப்பிடித்தான் எங்கட ஊரில ஒரு பழக்கம் இருந்தது. ஆராவது இறந்து போனால் அந்த ஆளைப் புதைக்கிறதுக்கான குழியை எங்கட ஆக்கள் வெட்ட மாட்டினம். இதுக்கு இன்னொரு பிரிவு ஆக்கள் வந்துதான் வெட்டுவினம். இதில நான் பெரிசு, நீ சின்னன் எண்ட காரணம் சரியா இருந்திருக்கும் எண்டு நான் நினைக்கேல்லை. எங்கட உறவுகளுக்கு நாங்களே குழி வெட்டுறது மனதுக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.
ஒரு தடவை ஒரு ஆள் இறந்து போனார். குழிவெட்ட ஆளுக்குச் சொல்லி அனுப்பியாச்சு. ஆக்கள் வரேல்லை. தாங்கள் இனி வெட்ட மாட்டினமாம் எண்ட செய்தி வந்தது. என்ன செய்யிறது? எங்கட சொந்தக்கார ஆக்களெல்லாம் கையைப் பிசைஞ்சு கொண்டு நிக்கினம். எல்லாருக்கும் கோவம் வந்து ஆளாளுக்குக் கதைக்கத் தொடங்க, எல்லா ஊர்களிலயும் இருக்கிற மாதிரி சில கொதிச்செழும்பின இளவட்டங்கள் நாங்க வெட்டிறம் எண்டு சொல்லி குழி வெட்டி அண்டைய சிக்கலை முடிச்சு வைச்சினம். பிறகு பேச்சு வார்த்தையில மற்றச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுது.
நான் இப்படிப் பயப்பட்டதுக்கு எங்கட அம்மா காரணமில்லை எண்டு மட்டும் சொல்லுவன். ஏனெண்டால் அம்மா ஒருநாளும் இந்த பேய்க்கதைகள் சொல்லிப் பயப்படுத்தினதா ஞாபகம் இல்லை. ஆனால் ஊரில கனபேர் கட்டின கதையளை கேட்டிருக்கிறன். அதெல்லாம் கட்டுக் கதையள் எண்டும் தெரியும்.
ஆனால் ‘சாவு’ எண்டால் சரியான பயம். அது என்ர சாவு பற்றின பயம் இல்ல. ஆராவது சாகிறது எனக்குப் பயத்தை தருது. இதுக்கு ஊரில நடந்த சம்பவங்கள் ஒண்டிரண்டு காரணமா இருந்திருக்கலாம்.
ஒரு தடவை எங்கட நெருக்கமான உறவு முறையான ஒருவர் கடலில மீன் பிடிச்சுக்கொண்டு நிண்டிருக்கிறார். இருந்தாப்போல அவருக்கு தலை சுத்தியோ ( உயர் இரத்த அழுத்தமாக இருந்திருக்கலாம்) என்னவோ அவர் கடலுக்குள்ளேயே விழுந்திட்டார். அவர் மீன் பிடிச்சுக்கொண்டு இருந்ததை மகன் கரையில நிண்டு பாத்துக் கொண்டிருந்தவர் நிலைமையை விளங்கிக் கொண்டு கடலுக்குள்ள பாய்ஞ்சு நீந்திப்போய் அவற்ர அப்பாவைக்கரை சேத்தார். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியேல்லை. பாத்தோம். செத்துக் கிடந்தவரை ஊரே பாத்தது. அழுது புலம்பி, அவரையும் வழியனுப்பியாச்சு. எனக்கு நல்ல ஞாபகம்; உடன பாத்ததுக்குப் பிறகு நான் அந்தப் பக்கம் போகவே இல்லை. அவ்வளவு பயமாயிருந்தது. உரிமைச்சோறு எல்லாரும் சாப்பிட்டினம். நான் போகேல்லை எண்டு அம்மா கொஞ்சம் கொண்டு வந்து தந்தா. நான் தொடவே இல்ல. அதுக்குப் பிறகு அந்த வீட்டு ஒழுங்கையால போறதுக்கு எனக்குக் கன காலம் எடுத்தது.
இதே மாதிரி ஆனால் இத விட மோசமான ஒண்டு நடந்தது.
அந்தக் காலத்தில மீன் பிடித்ததொழிலை சிறு தொழிலாக கனபேர் செய்து கொண்டிருக்க, ஆழ்கடலில மீன் பிடிக்க றோலர் எண்ட பெரிய வகையான மோட்டார் வள்ளம் வந்து சேந்தது. அந்த வள்ளங்களால இந்த சின்ன தொழில் செய்த ஆக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை. கண்ணை மூடிக் கொண்டு கார் ஒட்டுற மாதிரி, இவையளும் சிறுதொழில் செய்யிற ஆக்கள் தங்கட வலைகளை கடலில விரிச்சிருக்கிறது தெரியாமல் (?) அதை அறுத்துக் கொண்டு போயிடுவினம். அடுத்த நாள் அந்த வீடுகளில ஒப்பாரிதான். அவையளிட்ட இருக்கிறதே சின்ன முதலீடு. அதையும் ஒரு இரவில பறி குடுத்தால் அவையளால என்ன செய்ய முடியும்?இப்படி நடந்து கொண்டிருந்த காலத்தில தான் இன்னொரு உறவுக்காரர், இரவு கடலுக்கு இன்னொரு ஆளோட சேந்து போனார். வழமைபோல கடலுக்குள்ள வலையைப் போட்டு விட்டு விடியிறதுக்காக பாத்துக் கொண்டு இருந்திருக்கினம். வந்தது றோலர் ஒண்டு. இவையின்ர சின்ன படகை இடிச்சு விட்டுது. இடிச்ச வேகத்தில படகில இருந்த ரெண்டு பேரில ஒரு ஆள் கடலுக்குள்ள விழுந்து றோலரின் ஃபான் பகுதியால் வெட்டுப்பட்டிருக்கிறார். மற்ற ஆள் எப்படியோ கரைக்கு வந்திட்டார். கரை சேர்ந்தவரோ அதிர்ச்சியின் உச்சத்தில.
விடியப்புறம் சினிமாவில பாக்கிற மாதிரி ஊரே கடற்கரையில நிண்டது. ஆம்பிளையள் எல்லாரும் கடலுக்குள்ளயே நிண்டு தேடிச்சினம். அந்தப் பெம்பிளை தலையை விரிச்சுப்போட்டு கடலைப்பாத்து சாபம் விட்டுக்கொண்டிருந்தா. இரண்டாம் நாளோ மூன்றாம் நாளோ சரியாக ஞாபகம் இல்லை. மிதந்ததை கரைக்குக் கொண்டு வந்து ஒப்பாரி வைச்சினம். எல்லாரும் போய்ப் பாத்தினம். கிடைச்சது அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு எண்டு விபரிச்சினம். எனக்கொண்டால் அதைக் கேக்கவே விருப்பம் இல்ல, நான் அந்தப் பக்கமே போகேல்லை. அவை இருந்த வீட்டுக்குப் பக்கத்தில இருந்த மதவடியால தண்ணி மட்டும் நிக்காமல் ஓடிக் கொண்டிருந்தது கடல்ல சேர.
எனக்கு செத்த வீடுகளுக்குப்போறது எண்டால் பிடிக்கிறது இல்லை. ( ஆருக்குத்தான் பிடிக்கும்?). அதிலயும் உடம்பைப் பாக்கப் போறது எண்டால் இன்னும் கலக்கம். போயிட்டு வந்தால் தொண்டைக்குள்ள என்னவோ தங்கி நிக்கும்.
அதுக்கு முதலாவது காரணம், அங்க உள்ள ஆக்கள் தொடங்க முதல் நான் அழத்தொடங்கி விடுவன். அதுக்குப் பிறகு என்ன கதைக்கிறது எண்டு தெரியாது. அடுத்தது அங்க ஆராவது சாப்பிடக் கேட்டால் என்னால ஏலாது. ஏனெண்டு யோசிக்கிறன். சரியான பதில் தெரியேல்லை. அந்தச் சூழ்நிலையை என்னால ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது ஒரு விதமான அருவருப்புத்தன்மை காரணமாக இருந்திருக்கலாம். என்னால் இன்னும் சரியான காரணத்தச்சொல்ல முடியேல்லை.
இப்ப, இஞ்ச ஐரோப்பாவுக்கு வந்த பிறகு, வயதும் அனுபவங்களும் என்னில கன மாற்றங்கள தந்திருக்கு. ஆனால் இது மட்டும் மாறுது இல்ல.
கொஞ்ச நாளுக்கு முதல் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திது. சரி, காலமையில எழும்பி காரை விட்டிட்டு நடந்து போய் ரெயின் பிடிச்சு வேலைக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டு, ஒரு மாதம் பல்லைக்கடிச்சுக்கொண்டு நடந்தன். அதுவும் சேமக்காலையைக் கடந்துதான் போக வேணும். விடியக்காலமை நாலரை மணிக்கு நடக்கத் தொடங்க வேணும். ( வீட்டில இருந்து இரயில்வே நிலையம் ஒரு மூன்றரைக் கிலோ மீற்றர்). அதுக்குப் பிறகு முடியேல்லை. வீட்டில பயங்கரமா சிரிச்சினம் எல்லாரும்.
இறப்பைத் தவிர்க்க முடியாது எண்டதால, அது நடக்கிற எல்லா இடங்களுக்கும் போக வேண்டி இருக்கு. அழ வேண்டி இருக்கு, பூ போட வேண்டிய நேரத்தில ஒரு மாதிரி கால்கள் தடக்குப்படுகுது, அழுகிற ஆக்களப்பாக்க விருப்பமில்லாமல் இருக்கு, தாற தேத்தண்ணிய வாங்கிக் குடிக்க ஏலாமல் இருக்கு நாக்கு வரண்டாலும்.
இப்ப சேமக்காலை எண்டது பயம் மாதிரித் தெரியேல்லை, ஆனால் மரணம் எண்டது தோற்றுவிக்கும் உட்புற வெளிப்புற அவலங்கள் பயப்படுத்துது. பயமில்லை எண்டு சொல்லுற எல்லாருக்குள்ளயும் இந்த பயம் இருக்கிற மாதிரி தெரியுது.
வி. அல்விற்.
22.04.2015.
Muchas gracias. ?Como puedo iniciar sesion?