ஊரான ஓர் ஊரிலே
பேரான ஓர் பெயர் கொண்ட
பேர் விருட்சமொன்று
கிளை பரப்பி குடை விரித்து
குளிர்வித்து ஊர் காத்தது
வசந்தம் வந்தது
வந்தோரை வரவேற்றது
கோடை வந்தது
பயணிகளுக்கு நிழல் தந்தது
மாரி வந்தது
மழைக்கெல்லோரும் ஒதுங்கவிடம் தந்தது
தென்றல் வந்தது
ஊரவர் மகிழ பார்த்தது
புயலும் வந்தது
எதிர்த்து தனியே நிமிர்ந்து நின்றது
மக்கள் பெருமையாய்
ஏறிட்டுப் பார்த்து இறுமாப்படைந்தனர்
இனியெமை வெல்வாரெவர்
எண்ணி மகிழ்ந்தது ஊர்
நீண்ட கால வெறியுடன்
அயல் வீட்டு மரந்தறிப்போன்
நாள் பார்த்துக் காத்திருந்தான்
வெட்டிக்கூறு போட
சுற்றிச் சுற்றி வந்தான்
சுழன்று திட்டம் போட்டான்
முழுமையாய்ச் சாய்ப்பது
கடினமென் றுணர்ந்தான்
வேறுமோர் ஊர் கழுகு மொன்று
நீண்ட காலப் பசியுடன்
வட்டமிட்டிருந்தது
அவ்வூர் பிணம் தின்னவென
குரூரமும் பிணம் தின்னியும்
கை கோர்த்துக் கொண்டன
நலிவடைந்த கிளைகளை
வெட்டிச் சாய்க்க
முதல் முடிவு கொண்டன
உதவிக்கு சேர்த்தன
தம் போன்ற சிலரை
கிளைகள் சில
இலகுவாய் வீழ்ந்தன
ஊர் பதறியது
வீழ்ந்த கிளைகளே பல வேறு வீழக்
கோலாய் மாறின
மரம் ஆட்டம் காண
ஊரவர் அலறத் தொடங்கினர்
இறுதி வரை தாங்கிய மரம்
வெட்டுக்கள் பல விழ
சரியத் தொடங்கியது
வானமுட்டியிருந்த விருட்சத்தின்
கீழிருந்து மேலெழுந்த
மரண ஓலங்கள் அடியிலேயே
அமிழ்ந்து போயின
கழுகுகள் இரசித்துத்
தின்னத் தொடங்கின
மரம் வெட்டி
மரத்துடன் ஊரையும்
கூறு போட்டு விற்கத் தொடங்கினான்