ஊறணியின் அன்பார்ந்த உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு ” இடைவெளி ” என்பது உறவுக்குள்ள இடைவெளியல்ல. ஒன்றுபட்ட செயற்பாட்டில் ஏற்பட்ட இடைவெளியென்பதையே வருத்தத்துடன் தெரிவித்து நிற்கின்றேன். இருந்த போதிலும் மனமாற்றம் எல்லோருக்குமே தேவையாகத்தான் இருக்கிறது. இது வரையில் கசப்புணர்வுகள் இருப்பின் அவைகளை மறந்து விடுவோம். நாம் செயற்படாதிருப்பின் ஊறணி என்னும் தாயை கவனிப்பாரற்று நிர்க்கதிக்குள் தள்ளிவிடும் – துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விடுவோம்.
எனவே, உறவுகளே ஒன்றுபடுவோம். இங்கு நாம் விட்ட தவறுகளை சீர் செய்ய முயல்கின்றோம். அதே போன்று வெளிநாட்டு உறவுகளும் முன்வாருங்கள். கலந்தாலோசிப்போம். ஊறணியை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதை செயற்படுத்துவோம்.
இனி இங்கு – தாயகத்தில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அனைவருக்கும் தெரியப்படுத்த முயல்கின்றோம். உறவுகளே வாருங்கள், கைகோருங்கள்.வினைத்திறனாக செயற்படுவோம்.
இன்று – 01.12.2019 காலை 9.30 மணிக்கு ஊறணியில் ஆலய அருட்பணி சபை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இதில் –
நத்தார் திருப்பலி 24 ம் திகதி இரவு 11.30 க்கும், புது வருடத்திருப்பலி 01 ஆம் திகதி காலை 7.00 மணிக்கும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் அன்று பி.ப 4.00 மணிக்கு ஆசீர்வாதமும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
ஆலய சிரமதானம் காலநிலையைப் பொறுத்து எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.சேமக்காலை கம்பி வேலியிட்டு அறிக்கையிடப்படும்.
அருட்தந்தையின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகத் தடைப்பட்ட ஆலய மீள்கட்டுமானம் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. ( நடுக்கோயிலுக்குரிய 14 தூண்களில் 12 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளது.)
வெளிநாடு சென்று வந்த எம் அருட்தந்தையுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. ஆலயக் கட்டுமானத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததாகத் தந்தை தெரிவித்தார்.
மேலும் இங்கிருந்து உடனுக்குடன் தகவல்கள் கிடைப்பதில்லையென்ற மனக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
உடனேயே அக் குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எமது பங்குக்குருவும் எமது ஆன்மீகத் தந்தையுமான Fr. ராஜன் அடிகளாரின் 75 ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பலாலி மற்றும் மயிலிட்டி பங்குகளும் செய்யவுள்ளதால் அவர்களுடன் சேர்ந்தா அல்லது தனித்த எமது பங்கு மட்டும் எங்கு எப்படி செய்வது எனத் தீர்மானமில்லை. இருந்த போதும் எதிர்வரும் 10 ஆம் திகதி செய்வதாகத் தீர்மானம். இதில் வெளிநாட்டு உறவுகளும் கை கோர்க்கவும்.