அடுத்த நாள் மடக்கிப் பிடிப்பு!!
———————————-
16 வயது சிங்கள இனச் சிறுவனின் கைங்கரியம்!!!!
கடந்த 28ஆம் திகதி(28.09.2020) இரவு 7.30 மணி அளவில் காங்கேசந்துறை ஊறணி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மீனவர் ஜோன்சனின் படகே மேற்படி சிங்களச் சிறுவனால் கடத்தப்பட்டது. இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் பூட்டப்பட்டு வலைகள் ஏற்றப்பட்டு தொழிலுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்ட படகே 16 வயது சிறுவனால் கடத்தப்பபட்டது.
அன்றைய தினம் பிற்பகல் ஊறணி கடற்கரைக்கு வருகை தந்த குறித்த சிறுவன் அக் கடற்கரையோரமாகச்சுற்றித் திரிந்ததாகவும் இந்தியா எவ்வளவு தூரம் என ஒரு சிலரிடம் கேட்டதாகவும் ஊறணி வாசிகள் தெரிவித்தனர்.
படகு கடத்தப்பட்டதை அறிந்த மீனவத் தொழிலாளியான ஜோன்சன் தனக்குத் தெரிந்த கடற்கரையோரங்கள் எங்கும் குறிப்பாக ஊறணியிலிருந்து முல்லைத்தீவு ஈறாக அனைத்துப் பிரதேசங்களுக்கும் உடனடியாக அறிவித்ததோடல்லாமல் பொலிசாருக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை 9 மணியளவில் பொலிகண்டியிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில் வைத்து மேற்படி கடத்தல் சிறுவனுடன் பொலிகண்டி மீனவர்களால் படகு மடக்கிப் பிடிக்கப்பட்டு பலாலி அன்ரனிபுரத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் படகுடன் சேர்த்து ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
படகுச் சொந்தக்காரரான ஜோன்சனின் அதிரடிச் செயற்பாட்டாலேயே படகுடன் கடத்தல்காரச் சிறுவன் பிடிபட்டான் என அப்பிரதேச மக்கள் அம் மீனவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தற்பொழுது கடத்தல் சிறுவன் அன்ரனிபுரத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.ஏன்?எதற்கு படகு கடத்தப்பட்டது என்ற விபரத்தையும் தன்னைப் பற்றிய விபரத்தையும் இதுவரையில் சிறுவன் வெளியிடாதது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது.
04.11.2016 அன்று மீள ஒப்படைக்கப்பட்ட இக்கிராமத்தின் பலரது காணிகளை இராணுவம் தொடர்ந்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரிலிருந்து..
சூரியன்.