வேண்டும்வரம் தருவாய்
வேதமாமுனியே
ஊறணி மக்களின்
உன்னத நாள் – எம்
உயிரிலே கலந்த
உத்தமர் நாள்
அந்தோனி எனும்
அவர் நாமம் – நம்
ஆயுள் பிரியும் வரை
அவரே நம் வேதம்
ஊரிலிருந்தாலும்
உலகெங்கும் வாழ்ந்தாலும்
இன்று (13/06/15)
நேரில் வருவது போல்
நெஞ்சம் நெகிழ்கிறது
ஊரின் நினைவு வந்து வந்து
லேசாய்
உள்ளம் கசிகிறது
உள்ளமதில்
தேரில் பவனிவரும்
திருக்காட்சி தெரிகிறது
திரையிட்டுக் கண்ணை
கண்ணீர் மறைக்கிறது
உடலும் உயிரும் பிரியும் வரை
இவ்வுணர்வு
வந்து வந்தே வாழ்வில்
வலியும் ஒளியுமாய்
வாழ்க்கை நகரும் போல !
கண்டங்கள் கடந்தாலும்
எம்மோடு
கொண்டாடி மகிழ்ந்த
பாச உறவுகளைப் பிரிந்தாலும்
ஊரில் விளையாடிய
கோவில் வெட்டையும்
உருண்டு விளையாடிய
கடற்கரை மணலும்
தூரமாய் மறைந்தாலும்
கூடவே வாழ்வினுள் – அன்று
பின்னிப் பிணைந்த
காணி மனை கடல் மகிழ்வுகள்
கரைந்து போகின்ற வேளையிலும்
காவலரே நின்துணை தொடருதையா
காத்திடுவாய் – நம்
எதிர்காலப் பிள்ளைகளை
பார்த்திடுவாய்
அவர்வாழ்வுப்
பாதைகளை
ஊட்டிடுவாய்
உயர்பண்புகளை
உயர்த்திடுவாய்
கல்வித் தகமைகளை
கொடுத்திடுவாய்
கலைச் செல்வங்களை
கூடிக் கொண்டாடி
மகிழ வைத்திடுவாய்
காலம் மாறிடிச்சு
கணனி உலகாச்சு
திரைக்குள்ளே உலகம்
திறந்து பயணிக்கும்
திக்குத்திசை
தெரியவில்லை
நடப்பது
நல்லதா ? கெட்டதா ?
நாமறிய முடியவில்லை
பிள்ளைகள் படிப்பென்று
ஓடித்திரியுதுகள்
உச்சத் திறன்
கைபேசி என்றொரு
கணனிக்குறும் பெட்டியை
கைக்குழந்தை தனை
கவனமாய் பார்ப்பதுபோல்
கண்ணுறங்கும் வரை
கைவிடமறுக்கிறார்
கன தகவல் பார்க்க
கைபேசி
கட்டாயம் வேணுமாம்
கல்வியும் காட்சியும்
கடிதப் பரிமாற்றம்
குறுநெடு செய்திகளை
சொடுக்கும் நேரத்தில்
அனுப்பிப் பெறும்
அத்தனை சூட்சமமும்
அதில் உண்டாம்
இத்துட்டுப் பெட்டியிலே
எல்லாம் இருக்குதோ
சுத்துது காவலரே – தலை
சூதொன்றும் இல்லைத் தானே ?
சூதும் வாதும்
கூசும் காட்சிகளும்
சூட்சியாய் வீழ்த்தும்
தொலைநோக்குத் திட்டங்களும்
இதனுள்ளே
கொட்டும் குப்பைமேடாய்
இருப்பதாயும் சொல்லுகினம்
நவீன உலகத்து
நன்மை தீமை அறியாது
உள்ளம் படபடக்க
உம்பாதம் ஒப்படைத்து
வேண்டுகிறோம்
வள்ளலே வான்யேசு
கையிலேந்தும் வண்ண முகத்தோனே
அந்தோனி நாயகனே
நாளைய எம் செல்வங்களை
காத்திடுவாய் காத்திடுவாய்
கடைசிவரை காத்திடுவாய்