அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின்
இதய அன்பிலே உதித்தவனே
இறைசித்த அருளாலே உயிராகி
தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி
அருளா னந்தமாய் மண்வந்த
ஐயனே அமர நாயகனே
எங்களின் காவலனே காதலனே
பேச்சிலும் மூச்சிலும் பிரியாதிருப்போனே
கதைக தையாய் கேட்கிறோம்
கண்ணீ ரோடுஉம் காவியத்தை
கற்றலைக் கடந்தபின் கடலோடித்தந்தைக்கு
கைகொடுத்த வீட்டுக் காவலனே
பருவத்தே சின்னமலர் கரம்பற்றி
சிறந்த மணவாழ்வுச் சாட்சியாய்
செல்வங்கள் ஐந்து பெற்று
சீராய் வளர்த்தெடுத்த சிறப்புத்தந்தையே
மண்வீட்டில் மணவாழ்வைத் தொடங்கி
மனங்கொண்டு திடமாய் உழைத்து
கல்வீட்டில் குடும்பத்தை உயர்த்திய
உம் கடினஉழைப்பை என்சொல்ல
வாழும்போது வார்த்தை சுருக்கி – பேச்சால்
சூழும் பாவச்சுமைகள் ஒதுக்கி
அயலை அன்புச்செயலால் வளைத்து
அனைவர் இதயம் அமர்ந்தோனே
தரையில் படுத்தபொழுது அதிகமில்லை
ஊறணி மண்ணெனும் வாழ்வினிலே – கடலில்
உழைத்த பொழுதே அதிகமென்பார்
உன்னை அறிந்தோர் ஊரினிலே
நீலக்கடலும் பொங்கும் அலையும்
ஓடைக்கரையும் கூதல் காற்றும்
ஓடி ஓடி தேடித்தேடி
தினமும் சொல்லும் உந்தன்பெயரை
நீபடுத்தவலையும் பட்டமீனும் சேதிகேட்டு
பதறிப்பதறி அழுது மடியும் – கை
வலித்து நகர்ந்த கட்டுமரமும்
இருத்திவந்த கூடும் மீனும்
கூவிமாளும் உமைப் பிரிந்ததாலே
அலைகள்மோதி அடித்து மகிழும்
அழகு முருகை அழுகிறது
நீ விரித்துஎறியும் வீசுவலையின்-
ஓசை அடங்கிப் போனதென்று
புனிதர்பூசை அழைப்பு மணியின்
ஓசை காதினோரம் கேட்கிறது
கோவில் வெட்டைமீது உந்தன்
காலடிகள் கனவுபோல நகர்கிறது
உமைப் படித்து நாமும்வாழ – நின்
உழைப்பும் பண்பும் எம்மில்நீள
முடிந்தவரையில் முயன்று தொடர்ந்து
முடிவில் வருவோம் உம்மிடமே
குறிப்பு:அவர்பிரிவால் வாடும் உறவுகட்கு சமர்ப்பணம்