உந்தன் சேதி கேட்டபொழுது
பூத்தமலராய் எங்கள் மனசு
பொங்குதடியே
ஜந்து நாலு ஜந்து ஜந்து (20 – 25)
ஆண்டுபல கடந்திட்டாலும்
நெஞ்சில் ஏக்கம் தீரவில்லை – இங்கு நிற்பதற்கு நேரமில்லை
பார்க்கமனம் ஏங்குதடி
பளிங்கு ஊற்றுப் பாயும் காட்சி
காதினோரம் கேட்குதடி
சலசலக்கும் நீரினாட்சி
ஆடிமாசம் பிறந்திட்டாலே
ஆனித்தேர்போல்
அலையும் கூட்டம் – உந்தன்
அடிமடியில் பாசியள்ளும் (பாசி பிடுங்கும்)
பாட்டி தொடங்கிப்
பேத்தி வரைக்கும்
பகிடிக்கதைகளோடு
பொழுது ஓடும்
இரவில் கூட
அவைகள் நீளும்
சின்னக்கையால்
அள்ளவருமாம் அதிகபாசி
ஆசையூட்டி
அணைத்துப்பேசி
வேலைவாங்கும்
பெரியோர் கூட்டம்
ஓமோமெனச் சொல்லிச்சொல்லி
வாலைக்காட்டி
குஞ்சுமீனை பிஞ்சுக்கைகள்
பிடிக்கத்தேடும்
மீனைக்கண்ட சிறிசுக்கூட்டம்
பாலைக்கண்ட பூனைபோலே
பதறிப்பாய,
படபடப்புக்கண்ட மீனோ
பாறைக்குள்ளே மறைந்துபோகும்
பசுமரத்து ஆணியாக
பழையகாட்சி நெஞ்சுக்கூட்டில்
என்றும் வாழும்
எந்தப்படமும் இன்றுவரையில்
எடுக்கவில்லை இந்தக்காட்சி
உலகம்கூட எடுத்திடாது எங்களூரின்
இயற்கைமாட்சி