பெரியநாட்டான், சின்னநாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும்
சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம். அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லை
என்றுதான் நினைக்கிறேன். எம்மவர்கள் முன்பு காங்கேசன்துறையில் இருந்தார்களாம்.
(குறிப்பாக நாவலடி சந்தைக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம்.) அப்போது புகையிரதப் பாதை
அமைத்து புகையிரத நிலையமும் அமைத்த பின்பு அப்பாதையால் புகையிரதம் பெரும் இரைச்சலோடும்
புகையையும் நெருப்;பையும் சேரத்தள்ளி அது வேகமாக வரும் பொழுது அதுவும் இரண்டு கம்பியில்
எமது வீட்டுக்குள் பூந்து பெரும்பூதம் போல் எல்லாத்தையும் தள்ளிக்கொண்டு வந்துவிடுமோ என்ற
எண்ணத்தால் வேறு ஓர் இடம் தேடிப் பயணமானார்கள். இந்தப்பயணம் எனது தகப்பனாருடைய
தகப்பனின் தகப்பன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேணும். இது எனது யோசனை. எனது ஆச்சியை
கேட்டேன். அவர்கள் குடியேறினது ஊறணியில். ஆச்சியினுடைய தாய் தகப்பன் எங்கிருந்தார்கள்? நீங்கள்
படித்த பாடசாலை எது? என்ற விபரம் கேட்கவில்லை. ஆச்சி மேற்கொண்டு சொல்லவுமில்லை. அதை
நான் கேட்கவுமில்லை. எனக்கு தேவையற்ற விடயம் என விட்டுவிட்டேன்.
எனது மூளையின் வேகம் அப்பொழுது அவ்வளவுதான். அதன்பின் ஊறணி என்ற இடத்திற்கு
வந்து சேர்ந்தார்கள். அங்கு பெரும் ஊற்று ஓடிக்கொண்டிருந்தது. அதைக் காரணியாக வைத்துத் தான்
ஊறணி என்ற பெயர் வைத்திருக்க் கூடும். அத்துடன் றோ.க. கலவன் பாடசாலை இருந்த இடத்திற்கு
பெயர் றக்கீடு தோட்டம். அங்கு ஏன் பாடசாலை வந்தது என்றால் காங்கேசன்துறையில் எமதாட்கள்
இருந்தபொழுது அவர்கள் கிறிஸ்தவர்களாய் இருந்திருக்க வேணும். ந}ன் சிறுவனாக பாடசாலை போகும்
பொழுதில் ஒரு பாடசாலை இடிபாட்டுக்குள்ளாகி இருந்தது. நான் படித்த பாடசாலை இரு பக்கத்திற்கு
வாங்குகள் போடப்பட்டிருந்தது. அது புதுப்பள்ளிக்கூடம். அப்பவே அது பழைய பள்ளிக்கூடமாகத்
தோற்றம்.
பின்புதான் வாங்குகள் போடப்பட்டதென நினைக்கிறேன். அப்பொழுது எமது மக்கள்
காங்கேசன்துறையில் இருக்கும்பொழுது அந்தோனியாரை வழிபட்டுவந்தார்கள். அந்த இடம் கோவில்
இருந்த இடமென்று குடிமனைகள் இல்லாமல் வெறும் இடமாக இருந்தது. நான் அந்த இடத்தைப்
பார்த்தேன்.
அந்தோனியாரின வரவால்; சிகைஅலங்கரிப்பாளரான இரத்தினத்தினுடைய ஆட்கள்
அந்தோனியாரை வைத்து ஆதரித்து வந்தார்களாம். எமது ஆட்களும் கூடுதலாக வழிபட்டு வந்திருக்கக்
கூடும். எமது ஆட்கள் ஊறணிக்குப் போக, என்னை ஆதரித்து வழிபட்ட ஆட்கள் இங்கு இல்லை,
ஆகவே என்னை அவர்களின் இடத்திற்குக் கொண்டு போகும்படியும், அவர்களிடம் ஒப்படைக்கும்படியும்
காட்சி அளிக்கப்பட்டது. அதன் நிமித்தம் அந்தோனியார் கோவில் ஊறணியில் ஸ்தாபிக்கப்பட்டது.
அத்துடன் மரியாம்பிள்ளை அத்தானின் தகப்பன் மத்தியாஸ் அவர்களிடம் கேட்டேன். அந்தக் கோவில்
கட்டியது உங்களுக்கு தெரியுமாவென. அவர் சொன்னார். நாங்களறியப் பழங்கோவிலாப்போச்சு புதுக்
கோவில் கட்டவேணுமென்று சொன்னார். அவருக்கு வயது 72 வயது இருக்கலாம். ஆச்சியையும்
கேட்டேன் அவர் சொன்னார் தனக்கு தெரியாது என்று.
கோவில் கட்டவென கடலில் சுண்ணாம்புக்கல் எடுத்து சூளை வைக்கப்பட்டது. பின் சூளை
வைத்த சுண்ணாம்பு ஒரு குருவானவரால் விற்கப்பட்டது. கோவில் கட்டவில்லை.
நரசிம்ம கோவிலுக்குப் பக்கத்தில காணி இருக்கு
அத்துடன் நான் சோமேஸ்வரி வீட்டிற்கு போனேன். அங்கு அவவுடைய தகப்பனார் இருந்தார். அவருக்கு வயது 65
இருக்குமென நினைக்கின்றேன். தம்பி எவ்விடம் என்று என்னைக் கேட்டார்? ஊறணி என்றேன்.
உங்களுக்கு சொந்தமான ஊறணி ஆட்களுக்கு காங்கேசன்துறையில் காணி இருக்கு. குறிப்பாக நரசிம்ம
கோவிலுக்குப் பக்கத்தில் காணி இருக்கு. அது மதலைக் கிழவிக்கு சொந்தமான காணி. இதேவேளை
ஒரு நாள் ஒரு வாய்ச் சண்டையில் ஐயர் கூட்டமென்று சொன்னார்கள். அப்போதுதான் நினைத்தேன்.
அந்தப் பெரியவர் சொன்னதும் ஐயர் கூட்டமென்று சொன்னதும் சரியாய் இருக்கு. பெரும் ஊற்று ஓடிக்
கொண்டிருந்தபடியினாலும் சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகளும் வேறு வியாதிகளும்
சுகமடைவதற்கு ஒளடதமாயிருந்தபடியாலும் அந்த இடத்தில் லூர்து கெபி ஸ்தாபிப்பதற்கு ஒரு தூண்
கட்டி அதில் எங்கள் கோவிலில் இருந்த லூர்து அன்னையின் சுரூபம் ஊர்வலமாக கொண்டுவந்து
ஸ்தாபிக்கப்பட்டது. 1938ம் ஆண்டாய் இருக்கலாம் குருவானவர் பெயர் தெரியாது.
அக்காணி என் தகப்பனாருடைய சகோதரி கிரித்தீனம் றோமான் மாஸ்ரருடையதாகும். அவ அந்த
இடத்தை கோவில் அமைப்பதற்கு உபயமாகக் கொடுத்தார். விபரம் தெரியாமல் விளக்கம் இல்லாமல்
அனியாயமாய் பழங்கோவிலிடித்து புதுக்கோவில் கட்டினோம். புழங்கோவிலின் பெறுமதி! அதைப்
புனரமைப்புச் செய்து அழகுபடுத்த எமக்குத் தெரியாமல் விட்டுவிட்டோம். அதனுடைய பலகையில்
திராட்சைக் கொடி வடிவமைந்த சிங்காசனம் 14 தூண் (மரம்) பெரிய போளம் (விளக்கு) இவைகளின்
பெறுமதி தெரியாமல் கையை விட்டுவிட்டோம். அப்ப வெளிநாட்டிற்கு வந்த பெரிய ஆட்கள் கூட தங்கள்
மனதில் அமத்தி வைத்திருந்தார்கள். அல்லது வேறை இடங்கள் பாராது திரும்பினார்களோ தெரியாது.
கண்ணாடி போளம் (விளக்கு) கொழும்பில் பெரிய கடைகளில் அலங்காரத்திற்காக தூங்கினதை
கண்டேன். சற்பிரசாத விளக்கு, பித்தளை வேலைப்பாடுடையது, அதைக்கழற்றி அலங்கோலமாக
அப்புறப்படுத்தி வெள்ளைக் கிளாஸ் வெளிச்சம் வைத்த கெட்டித்தனமான எண்ணம், அப்படி பலவிதமான
பிழைகளை விட்டுவிட்டு எதுவோ கனக்கத் தெரிந்தவர்கள் மாதிரி எண்ணம். நான் சுவிஸ்லாந்திலிருந்து
வேறு கோவில்களுக்குப் போயுள்ளேன். அங்குள்ளவர்கள் பழைய பொருட்களை எவ்விதமாக பாதுகாத்து
அலங்காரமாக வைத்திருக்கிறார்கள்.
நானறியப் பழைய கோவிலில் முகப்பில், செம்பு, மாவிலை போன்ற வடிவம் இருந்தது. அதை
விடுத்து 1940ம் ஆண்டளவில் சீமேந்தால் பூச்செடியும் குருசும் வைத்தது. அந்த வேலை முகப்புக்கு
அலங்காரமாகத் தான் இருந்தது. இப்போது விருப்பமில்லாத முகப்பு.
எழுதியவர்;: தேவசகாயம் யோசேப் 25.03.2003









