- புனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.
- ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், திரு.இ.விஜய மனோகரன், திரு.ப.செபஸ்ரியன், திரு.அ. அருள் ஜெயரட்ணம்.)
- புலம் பெயர் உறவுகள் அனைத்து நாடுகளின் சம்மதத்துடன் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து இச்செயற்பாட்டாளர்களுடன் ஒன்றித்து செயற்பட அழைப்பு.
- ஆலய கட்டடத்தின் பொறியியல் தொழினுட்ப செயற்பாட்டாளர்களாக இருவர் நியமிப்பு.(திரு.அ. ஒஸ்ரின், திரு.பி.லி.சஜீவன்)
- அருட்பணி சபை நிர்வாகத்தினரின் நேரடிக்கண் காணிப்பின் கீழ் ஆலயக்கட்டடத்தின் கட்டுமானத்தின் அனைத்து செயற்பாடுகளும் (கணக்கறிக்கை உட்பட) நடைபெறும். குறைந்தது மாதம் ஒரு தடவை நிர்வாகக் கூட்டம் கூடி சாதக பாதகங்களை ஆராயும்.
- தொழினுட்ப வல்லுனர்களின் தர மதிப்பீட்டிற்கு அமைய பழைய ஆலய அத்திவாரத்தின் மேலே புதிய கட்டடம் கட்டப்படும். (புதிய ஆலயம் தொடர்பான மேலதிக விபரம் பின்னர் தரப்படும்.)
UDO
udo வின் வாக்குறுதியின் மூலம் எமது ஆலயத்திற்கு 20000 ரூபா சம்பளத்தில் பணியாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டார். எனினும் இதுவரை udo அவருக்குரிய சம்பளத்தை வழங்கவில்லை. இதற்கு பொறுப்பாக இருந்த புலம்பெயர் நாடுகளின் நிர்வாகங்களும் இதனைக் கருத்தினில் எடுக்கவில்லை. கடந்த சித்திரை மாதம் வரையான 13 மாதங்களிற்கு 260000 ரூபா சம்பளமாக அருட்பணி சபை வழங்கியுள்ளது. இப்பணம் மற்றும் தொடர்ந்து வரும் காலத்திற்குரிய சம்பளத்தை புலம்பெயர் நிர்வாகங்கள் வழங்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக் காணியால் எழுந்த மனக்கசப்புக்கள்.
சீந்திப்பந்தல் காணியை விற்பதற்கு ஒரே குரலாய் ( புலம் பெயர் உறவுகள் உட்பட) முடிவெடுத்து அதற்காக ஏலம் மூலம் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டு விற்று முடிக்கப்பட்டுள்ளது.
எனினும் விற்ற பணத்தை என்ன செய்ய வேண்டுமென்று புலம் பெயர் வாழ் ஒரு சிலர் விடுத்த கட்டளைகள் (கோரிக்கைகளல்ல) தனக்கும் தாயக உறவுகளுக்கும் மனக்கசப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது. இதனையிட்டு எமது பங்குத்தந்தை பொதுக் கூட்டத்தில் ஆற்றிய தனது உரையில் ” சீந்திப்பந்தல் காணியை உறவுகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு முன் நின்று உழைத்தவர்களுடன் தானும் பங்கு கொண்டு கனடாவின் Montreal வரை சென்று காணியின் சொந்தக்காரியைத் தேடிப் பிடித்து காணியை வாங்கி சீந்திப்பந்தலில் உள்ள அருட்தந்தையின் பெயரில் எழுதி எமது தாயக உறவுகளுக்கு கொடுப்பதற்கு உழைத்ததாகவும் அப்போது இதற்காக தோள் கொடுத்தவர்கள் – கஸ்ரப்பட்ட உறவுகள் எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்காத போதும் – இக்காணி வேண்டுவதில் அப்போது அவ்வளவு ஈடுபாடு காட்டாத புலம் பெயர் வாழ் இளையவர்கள் சிலர், தற்போது பல கிடுக்குப் பிடிகளையும் கடிய வார்த்தைப்பிரயோகங்களையும் எமது வைபர் தளத்தில் வற்புறுத்தல்களாக பிறப்பிப்பதால் தம்மையும் தாயக வாழ் உறவுகளையும் மிகுந்த மனக்குழப்பத்திற்குள் ஆழ்த்திவிடுவதாகவும் தெரிவித்தார்.
தாயகத்தில் நிர்வாகங்கள் கட்டுக்கோப்புடன் இயங்குவதோடு நிதி கையாள்வதில் எவ்வித சந்தேகங்களோ,ஜயப்பாடுகளோ எழாதவண்ணம் சரியான கணக்கு வழக்குகள் மேற்கொள்ளப்படுவதையும், அபிவிருத்திப் பணிகள் இடம் பெறுவதையும் தாயக நிர்வாகங்கள் உறுதிப்படுத்துகின்ற போதும் புலம் பெயர் இந்த இளையவர்கள் பயன் தரா வார்த்தைகளைப் பிரயோகிப்பதையிட்டு தாயக உறவுகளோடு தானும் மன வேதனைப்படுவதாகவும் -மிகவும் மனம் நொந்து தமது கருத்தை கூட்டத்தில் பதிவு செய்தார்.
அத்தோடு உண்மையான அபிவிருத்தி என்பதற்கு புலம் பெயர் அமைப்புக்கள் சரியான விளக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
அபிவிருத்தி என்பது வெறும் கட்டடங்களோ, தொழிற்சாலைகளோ அல்ல.மனித நேயத்தோடு தேவையான வசதி வாய்ப்புக்களைப் பெருக்கி நல்லிணக்கத்தோடு வாழ வழி வகுப்பதேயாகும் என்று அடிகளார் தெளிவு படுத்தினார்.
மற்றையவர்களின் கருத்துக்களிற்கும் நம்பிக்கைகளிற்கும் மதிப்பளிப்பதே உண்மையான அபிவிருத்தியின் முதற்படியாகும்.
மனித நேயத்தைப் பெருக்குவதற்கு ஆலயங்கள் உதவி புரிகின்றன. இங்கே மக்கள் ஒன்று கூடுவதற்கும், தமக்கிடையே பகிர்ந்துண்ணுவதற்கும், விட்டுக் கொடுத்து வாழ்வதற்கும்,தம் மனக்கவலைகளை இறைவனிடம் போக்கிக் கொள்வதற்கும், ஆன்ம பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் துணைபுரிகின்றன. என்றாலும் சீந்திப்பந்தல் காணி விற்ற பணத்தை கோயில் கட்டுவதற்கு பயன்படுத்துவதாக எந்தத் தீர்மானத்தையும் இக் கூட்டத்தில் எடுக்கவில்லை.
மேலும்- கொடுத்த பொருளுக்கு சொந்தம் கொண்டாடாது நேர்த்தியாக இயங்கும் இங்குள்ள நிர்வாகத்திற்கு -அதனை நிர்வகிப்பதற்கு, புலம் பெயர் நிர்வாகங்கள் அனுமதி வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தந்தையின் உரையைத் தொடர்ந்து –
வாய்க்கு வந்தது போல் பைபரில் கருத்தை முன்வைக்காது அந்தந்த நாடுகளின் நிர்வாகங்கள் இதனைக் கட்டுப்படுத்தி – நேர்த்தியான -நிர்வாகக் கருத்துக்களாக ,வெளிப்படுத்த ஆவன செய்யுமாறு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புனிதரின் திருவிழா
- கொடியேற்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி – திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம் பெறும். இதைத் தொடர்ந்து விருந்து இடம்பெறும்.
- திருநாள் திருப்பலி 13ம் திகதி – வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதிய போசனம் ( லண்டனில் உள்ள ஜெகன் குடும்பத்தினரால்) இடம் பெறும்.
- ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் நவ நாட்கள் இடம்பெறும்.பிற்பகல் 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஆரம்பமாகும்.
- எதிர்வரும் 12 ஆம் திகதி புதன் கிழமை பி.ப 4.00 மணிக்கு புனிதரின் கூடு சுற்றுப் பிரகாரம் ஆரம்பமாகி வழமை போல் ஊரைச் சுற்றி ஆலயத்திற்கு வந்தடைந்ததும் நற்கருணைப் பெருவிழா இடம் பெறும்.
- எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி இடம் பெறுவதோடு அன்றைய தினம் சிரமதானமும் விருந்து மற்றும் கொடியேற்றத்திற்கான முன்னாயத்தமும் இடம் பெறும்.
- ஆலயக் கட்டுமானம் மற்றும் புனிதரின் திருவிழாவிற்கு தமது பூரணமான ஆதரவைத் தெரிவிக்குமாறு புலம் பெயர் உறவுகளுக்கும் அங்குள்ள நிர்வாகங்களுக்கும் இப்பொதுக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.