Home / வசந்தியின் பக்கங்கள் / ஊரும் உணர்வும்.1

ஊரும் உணர்வும்.1

எங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி.

சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம்.
அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க வேணுமெல்லோ? இல்லாட்டில் என்னத்தையோ பேய் பாத்த மாதிரி இருக்கும்.
சம்மாட்டி எண்டால் பெரிய வள்ளங்களுக்கு சொந்தக்காரராக இருப்பினம்.( கப்பல் எண்டு நினைக்காதையுங்கோ! அதை விடச் சின்னது. கப்பலுக்கும் வள்ளத்துக்கும் இடைப்பட்டது ஒண்டு இருக்கு. அதை றோலர் எண்டு சொல்லுவினம்).
ஆரம்ப காலங்களில “கரைவலை” வைச்சிருந்து மீன்பிடித்தொழில் செய்து கொண்டிருந்த ஆக்களே “சம்மாட்டி” எண்டு பேர் பெற்றவை. பிறகு காலப்போக்கில ஊர்களில வள்ளங்கள் வைச்சிருந்து தொழில் செய்த ஆக்களும் இந்தப் பேரை ஏற்றுக் கொண்டிட்டினம். இந்தச் சம்மாட்டிமார் கொஞ்சம் ஊரில நல்ல வசதி வாய்ப்போட இருப்பினம். (எங்கட அம்மா கொண்டை புறோச் கூடப் பவுணில வைச்சிருந்தவா எண்டால் யோசியுங்கோ எப்பிடி இருந்திருப்பம் எண்டு).
இவை இந்த வள்ளங்களையும் அதுக்கேத்த பொருட்களையும் வைச்சுக்கொண்டு தனிய ஒண்டும் செய்ய ஏலாது. ஆட்கள் வேலைக்கு வேணும் மீன்பிடித் தொழில் செய்ய. மீன் பிடிக்க வேணும், பிறகு அதை விக்க வேணும். எப்படி விக்கிறது தொகையாக மீன்கள் பிடிச்சால்? அதெல்லாத்தையும் வெட்டி உப்பில ஊற வைச்சு கருவாடாக மாத்த வேணும். அப்பிடிக் கருவாடாக மாத்தினதை லொறிகளில கொழும்புக்கு அனுப்ப வேணும்.
இதில இன்னுமொரு விசயம் இருக்கு. தனியக் கருவாட்டை மட்டும் சனங்கள் விரும்ப மாட்டினம் எல்லோ?
அப்ப மீனாய் அவ்வளவு தூரம் கொழும்புக்கு எப்படி அனுப்புறது?
ஆஆ.. இருக்கவே இருக்கு ஐஸ். பெட்டிகளில மீன்களை வைச்சு, ஐஸ் போட்டு நிரப்பி, அதைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்ய வேணும். இதில இன்னுமொரு விசயம் இருக்கு. எங்கட ஊரில, கருவாட்டுக்கு “மானமுள்ள” மீன்கள் என்னென்ன, மீனாய் பாவிக்கிறதுக்கு மானமுள்ள மீன்கள் என்னென்ன எண்டு பெரியாக்களுக்குத் தெரியும். அதுக்கேத்த மாதிரி எல்லாம் நடக்கும். இதில “மானம்” எண்டு எழுதியிருக்கிறது என்னெண்டு விளங்கிச்சுதோ? “மானம்” எண்டால் பெறுமதி. ( ஒரு பொருளுக்கான கேள்வி எண்டு எடுக்கலாம்).
இதுக்கு முதல் ” கரைவலை” எண்ட ஒரு சொல்லுப் பாவிச்சிருக்கிறன். கனபேருக்குத் தெரியும் அது என்னெண்டு. ஆனால் சில பேருக்குத் தெரியாததால சொல்லுறன். “கரைவலை” எண்டால் கடல்ல வலையை வளைச்சு வீசிட்டு கரையில நிண்டு வலைக்குள்ள அம்பிட்ட மீன்களோட சேத்து வலையை இழுத்து எடுக்கிறது. இந்தக் “கரைவலை” த்தொழிலை சாதாரண கடலில செய்ய ஏலாது. கரையில் நிண்டு வலையை இழுக்கிறது எண்டால் இழுக்கிற பகுதியில பாறைகள் இருக்கக்கூடாதெல்லோ? அப்ப அதுக்கேத்த இடங்கள் தேட வேணும். தேடிச்சினம் எங்கட ஆக்கள் கொலம்பஸ் மாதிரி.
அப்பிடிக் கண்டுபிடிச்ச இடங்கள்தான் மணற்காடு, குடத்தனை, தாளையடி, செம்பியன்பற்று, அப்பிடியே தொடர்ந்து அளம்பில், கொக்கிளாய் என்று முல்லைத்தீவு வரை நீண்டது.
எங்கட அப்பா அளம்பில், கொக்கிளாய் பகுதிகளில் ஆக்களை வைச்சு கரைவலை செய்தவர்.
இப்பிடிக் கண்ட இடங்களில எப்பிடி மீன் பிடிச்சிரிப்பினம் எண்டு நினைக்கிறீங்கள்? அந்தக் கதைகளையே ஒரு புத்தகமாக எழுதலாம். பெப்ரவரி, மார்ச் மாதமளவில் ஊரில இருந்த துணைவி, பிள்ளைகளைப் பிரிய முடியாத சோகத்தோட ” கரைவலை” செய்யிற ஆம்பிளையள் வெளிக்கிட்டுப் போவினம். அந்த நேரம் பிள்ளைகளுக்கு கைகளில காசு கிடைக்கும் அப்பாக்களால. அப்படிப் போறவை, அங்கேயே தங்கியிருந்து ஏறக்குறைய மாரி காலத் தொடக்கத்தில, அதாவது ஒக்டோபர் மாதமளவிலதான் திரும்பி வருவினம். இந்த இடைக்காலத்தில ஏதாவது அவசர தேவை எண்டால் வீடுகளுக்கு வந்து போவினம்.
அப்ப, இவ்வளவு வேலைகளையும் தனிய ஒரு ஆளாய் செய்ய முடியுமோ? அதுக்குத்தான் ஆட்களை சம்பளத்துக்கு வைச்சு வேலை செய்விக்கிறது.
அங்கை இருக்கிற காலத்தில தொழில், சமையல் எல்லாமே அந்த ஆம்பிளையள் தான். இந்த இடைக்கால தனிமை வாழ்க்கையைப்பற்றி வீடுகளுக்கு திரும்பி வந்தவுடன கதை கதையாச் சொல்லுவினம்.
இந்த சம்மாட்டிமார் தங்கட தங்கட வசதிக்கேற்றபடி பெரிய அளவிலேயோ சின்னதாகவோ தொழிலைச் செய்து கொள்ளுவினம்.
நான் பிறந்து வளந்த வீட்டுக்கும் கடலுக்கும் இடையில வேற ஒண்டுமே இல்லை கடற்கரை மணலைத்தவிர. ஆருக்கு இப்பிடி ஒரு பாக்கியம் கிடைக்கும்? விடிய எழும்பி முளிக்கிறதே கடலுக்கால எழும்பி வாற சூரியனிலதான். எட்டிப்பிடிக்கலாம் போல அவ்வளவு கிட்டத்தில எழும்பி வரும். அப்பிடியே கடல் பளபளக்கும் பாருங்கோ!!!! அதை சொல்லி விளங்கப்படுத்த ஏலாது.
எத்தினை இரவுகள் கடற்கரை மணலில படுத்து இருந்திருப்பம். ஆரும் இடைஞ்சல் படுத்தாத காலம் அது.
வீட்டில மீன் வகைகளுக்கு குறைவே இருக்காது. காலத்துக்கு வரும் உடன் ஓரா, ஒட்டி புளியாணமும், சொதியும், நெத்தலிச் சொதியும் தனியக் காணும் சோத்துக்கு. கீரி மீன் பொரிச்ச குழம்பும், சூடைப்பொரியலும், திருக்கை வறையும், சாளை மீன் பொரியலும், சின்னட்டி, கும்புளா, பாரை, கிளி, நகரை மீன், வாளை, சீலா, அறக்குளா, கட்டா, அதள், வௌவால், விளைமீன், சுறா எண்டு நாங்கள் சாப்பிடாத மீன் வகையே இல்லை.
இஞ்ச வெள்ளைக்காரர் கடைகளில விக்கிற நண்டை நாங்கள் அங்கே “பேய்நண்டு” எண்டு தூக்கிக் கடலிலேயே போட்டு விடுவோம். “அட்டாளை நண்டு” என்று ஒருவகை நண்டு வலைகளில் சிக்கும். அதன் உருசியே தனி. இதை விட நீலக்கால் நண்டு.
மத்தியானம் சாப்பிட்டிட்டு கடலுக்குள்ள இறங்கிடுவம். அல்லது வெட்டையில புழுதி பறக்கும் அம்மா தேடும்வரை. எங்கட ஊரில எல்லா வீடுகளிலயும் கிணறு இருக்கும். ஆனால் ஒரு சின்னச் சிக்கல் என்னெண்டால் ரெண்டாப் பிரிச்சுப்போட்ட மாதிரி, காங்கேசந்துறை பருத்தித்துறை வீதியில் கடற்கரைப்பகுதிக் கிணறுகள் உப்புத்தண்ணியாயும் மற்றப்பகுதிக் கிணறுகள் ஏறக்குறைய நல்ல தண்ணியாயும் இருக்கும். எங்கட வீடு கடற்கரைப்பகுதி எல்லோ? குடிக்க ஏலாது. காலமை, பின்னேரம் எண்டு நல்ல தண்ணி எடுக்க சோடி சேத்துக்கொண்டு குடத்தை இடுப்பில வைச்சுக்கொண்டு வெளிக்கிட்டுப் போவம். ஆனால் ஒண்டு எங்கட வீட்டுக் கிணறை நாங்கதான் கிணத்துக்குள்ள இறங்கி துப்புரவு செய்து முடிப்பம்.
இப்பிடித்தான் ஒருநாள் என்ர அக்கா கிணத்துக்குள்ள. நான் வெளியில நிண்டு தண்ணி முழுதையும் கப்பி வாளியால இறைச்சுக் கொண்டு நிக்கிறன். அக்கா உள்ள நிண்டு துப்புரவாக்கி வாளியை நிரப்பிட்டு “இழு” எண்ட நான் இழுத்து வெளியில ஊத்திக்கொண்டிருந்தனான். எனக்குக் கொஞ்சம் பஞ்சி வரத் தொடங்கிட்டுது. ” வாளியை விடு” அக்கா கத்த, நான் வாளியை கிணத்துக்குள்ள இறக்க, அது கணக்கா அக்காவின்ர தலையில போய் “டங்”….. அக்காவின்ர தலையால ரத்தம் ஓடுது. எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. “ஐயோ” எண்ட, எல்லாரும் வந்து சேந்திட்டினம். அக்கா எண்டாலும் தைரியசாலி. ஒருமாதிரி பிடிச்சுக்கொண்டு மேல ஏறி வந்திட்டா. பிறகென்ன? எல்லாரும் என்னைச் சுத்தி நிண்டு அர்ச்சனைதான்.
நாங்கள் ஒண்டும் கோடீஸ்வரரா வாழேல்லை.
ஆனா நிறைவாக வாழ்ந்து வந்தனாங்கள் ஒரு காலத்தில.
நானும் படிச்சேன். யுனிவர்ஸிற்றிக்குப் போறது எங்கட அப்பத்தைய கனவெல்லோ? அங்கையும் போனன். பட்டமும் வாங்கினன். பிறகென்ன? வேலையும் கிடைச்சது.
நல்லா வாழ்ந்தமா?
பொறுக்கேல்லை அவங்களுக்கு.
நாசமாய்ப் போனவங்கள் வேலி பிரிச்சு வந்தாங்கள் முதல்ல.
பிறகு அமைதி எண்டு வந்து துரத்தி விட்டாங்கள்.
அப்பிடியே ஊரூராய் அலைஞ்சோம்.
வெறுத்துப்போய் நாட்டையே தொலைச்சோம்.
இப்ப,
எல்லாமே தூரமாப் போச்சு.

வி. அல்விற்.
16.02.2015.

 

About ratna

One comment

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang