நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள்,
ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடாமல் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு சில சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டின் ஒரு பகுதியிலே பின்னேரங்களில் படிப்பித்தும் கொண்டிருந்தாள். அவளை ஒரு தடவை பார்த்தால் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் போல ஒரு ஆவலைத் தூண்டும் கொள்ளை அழகு அவளுடையது. எத்தனையோ பேர் கண்ணடித்துப் பார்த்தார்கள்; கடிதம் கொடுத்துப் பார்த்தார்கள். நளாயினியின் கவனத்துக்கு எதுவுமே வரவில்லை.வலிகாமம் வடக்கு அகதியானபோது மிகச் சிறுமியாயிருந்தவள், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, வன்னி, மீண்டும் யாழ்ப்பாணம் என்று திரும்பியபோது திருமண வயதை எட்டியிருந்தாள். திருமணம் என்றால் சும்மாவா? எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார்கள் பெற்றோர். சில இடங்கள் மாப்பிள்ளை “படிக்கவில்லை”, சில இடங்கள் “பெருத்த குடும்பம்”, சில இடங்கள் “அவை எங்களை விடக் கொஞ்சம் குறைவு”, என்று நிறைய இடங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே போனதில் நளாயினிக்கு இன்னும் இரண்டு வயது ஏறிப் போனது.
இந்தக் கால கட்டத்தில் லண்டனில் இருக்கும் சித்தப்பா “என்ன எவ்வளவு காலமா மாப்பிள்ளை தேடுறியள்? விடுங்கோ நான் இஞ்சை அவளுக்கு மாப்பிள்ளை பாக்கிறன்” என்று வீராப்பாக தான் ஒரு பக்கத்தால் தேடத் தொடங்கினார். இவரால மட்டும்தான் மாப்பிள்ளை தேட முடியுமோ நான் மாப்பிள்ளை எடுத்துக் காட்டுறன் என்று பிரான்சில இருக்கிற மாமா, மாமியின்ர தங்கச்சி குடும்பம் என்று எல்லாரும் ஒவ்வொரு பக்கத்தால மும்முரமாகத் தேடத் தொடங்கினர். ஆனால் எல்லாரும் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை மாப்பிள்ளை தேடுவது. சரியாய் வரும் என்ற நோக்கத்தில் அணுகினவர்கள் நாட்டிலே இருந்து பெண் எடுப்பதை விரும்பவில்லை. தாங்கள் படித்த படிப்புக்கு அங்கேயிருந்து பெண் வந்து மொழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இங்கேயே படித்த பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதை விரும்பினார்கள்.
ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து லண்டன் சித்தப்பாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தது. சித்தப்பாவுக்கு ஒரே புழுகம் தான் முதலில் மாப்பிள்ளை தேடியதையிட்டு. அதுக்கும் சும்மா இல்லை இஞ்சினியர் மாப்பிள்ளை. மாப்பிள்ளையைப் பற்றி சரியாக விசாரிக்கும் படி நளாயினியின் அம்மா திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டாள். வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் அவளுக்கு ஒரே சந்தேகம்.ஒரே ஒரு மகளை சிக்கலில்லாத இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டாத கடவுளில்லை. சித்தப்பா விசாரித்ததில் குடும்பத்தைப் பற்றி எல்லோருமே நன்றாகச் சொன்னார்கள். மகனைப் பற்றி சில தவறான தகவல்களும் வந்தன. சித்தப்பா விடாமல் எட்டத்தால் விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பந்தத்தை விட விருப்பமேயில்லை. இஞ்சினியர் மாப்பிள்ளை எல்லோ!
பிரான்சில இருக்கிற மாமாவுக்கு தனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற கவலையோடு, சித்தப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு சரியில்லை என்ற பேச்சும் வந்து சேர, அவர் உடனேயே சித்தப்பாவுடன் தொடர்பு கொண்டார். “நீ பாத்திருக்கிற மாப்பிள்ளை ஆரோ ஒரு பெட்டையோட சுத்துறானாம்; தெரிஞ்சு கொண்டு என்னெண்டு எங்கடை பிள்ளையைக் குடுக்கிறது?” என்று குதித்தார். “இஞ்ச பெடியள் எண்டா ஒரு வயசில அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்கள்; பிறகு கலியாணம் கட்டினாப் பிறகு ஒரு ஒழுங்குக்கு வந்திடுவாங்கள். அந்த தாய் தகப்பன் நல்ல ஆக்கள்; அதுகள் சீதனம் கூட ஒண்டுமே வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டுதுகள். இத விட நல்ல சம்பந்தம் எங்களுக்குக் கிடைக்காது” என்று சொல்லி முடித்தார் சித்தப்பா. “அப்பா அந்தப் பெட்டை என்னெண்டாலும் பிரச்சனை செய்தால்?…. ” “அந்தத் தாய் தகப்பனுக்கு அந்தப் பெட்டையைப் பிடிச்சிருந்தால் ஏன் கட்டி வைக்காமல் இருக்கினம்? அதுகள் அவனை அதுக்குளால வெளியாலை எடுக்கிறதுக்குத்தான் இப்ப கலியாணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கினம்; இப்பிடி ஒரு இஞ்சினியர் மாப்பிள்ளை எங்கடை பிள்ளைக்கு ஊரில கிடைக்குமோ?” என்று தனது வாதத்தை சளைக்காமல் முன் வைத்தார் சித்தப்பா. மாமாவுக்கு பிடிக்கவில்லை “இதுகளாலை பிறகு பிரச்சனை வந்தா எங்கடை பிள்ளைக்குத்தான் கஷ்டம்” என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.
சித்தப்பா அசரவில்லை. காலத்தைக் கடத்தாமல் நளாயினியை முகவர் மூலமாக விரைவிலேயே லண்டனுக்கு அழைப்பித்துக் கொண்டார். பலர் எச்சரித்திருந்தும் தட்டி விட்டு விட்டு சித்தப்பா திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். நளாயினிக்குக் கூடப் பெருமையாக இருந்தது. இவ்வளவு ஆடம்பரமான திருமணக் கொண்டாட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அதை விட அழகான படித்த கணவன்! “நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணிக் கொண்டாள்.
திருமண நாளன்று எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தன. எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். கொண்டாட்டக் களைப்பு போகவே கொஞ்ச நாள் எடுக்கும் போல இருந்தது. இந்த அமளிகளுக்குள் நளாயினி எதையுமே கவனிக்கவில்லை. கணவன் பிரேம் விரைவிலேயே வேலையைத் தொடங்கியிருந்தான். ஆனால் வீட்டுக்குத் தாமதமாக வந்து கொண்டிருந்தான். முதல் சில நாட்கள் அவளுக்கு அதைப் பற்றிக் கேட்கவே பயமாக இருந்தது. ஆனால் தொடர்ந்தும் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அருகிப் போகவே அது பற்றி கேட்க முற்பட்டபோதுதான் தான் எப்படிப்பட்ட பயங்கரத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டுள்ளேன் என்பது புரிந்தது.
“நீ நினச்சனியா நான் உன்ர வடிவில மயங்கிக் கலியாணம் செய்தனான் எண்டு?” என்று அவன் கேட்டபோது அவளுடைய பேரழகு அவளைப் பார்த்துச் சிரித்தது.
“இந்த வயது போனதுகளின்ர ஆக்கினைக்காகத்தான் நான் ஓம் எண்டனான்” என்றபோது எங்களுடைய குடும்ப உறவுகள் என்னவென்றாகிப் போனது.
“நான் என்ர கேர்ல் பிரெண்ட் ஓட இருக்கிறனான் எண்டு தெரிஞ்சுதானே என்னைக் கட்ட ஓமெண்டு சொன்னனீ ” என்று அவன் வார்த்தைகளால் விளாசியபோது திருமணத்தில் எதிர்பார்க்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யாருமற்ற பூமியில் தன்னந்தனியே தான் மட்டும் நின்று கொண்டிருக்கும் உணர்வு தோன்ற பயத்தில் உடம்பு சோர்ந்து நடுங்குமாப்போல் இருந்தது. இனி என்ன செய்வது என்ற கேள்வி முன்னாலே பெரிதாக எழுந்தது. உண்மையிலேயே அவளுக்கு இந்த விடையம் மறைக்கப் பட்டிருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து தன்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டார்களே என்று கோபம் வந்தது.
மாமா, மாமியார் தனக்காகப் பரிந்துரைப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தாள்; அவர்களால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்து யோசித்துப் பார்த்தாள். பிறகு எழுந்து சித்தப்பாவுக்கு தொலைபேசி எண்களை அழுத்தினாள். சித்தப்பா தொடர்பில் வர “என்னை இப்ப வந்து கூட்டிக் கொண்டு போங்கோ, இஞ்சை என்னால இருக்கேலாது” என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டுத் திரும்ப மாமி முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனார். நளாயினி போட்டிருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு ஊரிலேயிருந்து வந்தபோது போட்டிருந்த சின்னக் கல்லுத் தோட்டையும், சங்கிலியையும், இரண்டு சோடிக் காப்புக்களையும் போட்டுக் கொண்டு தன்னுடைய உடுப்புக்களை மாத்திரமே அடுக்கி எடுத்தாள்.
You have remarked very interesting details!
ps decent web site.Blog range