சொல்லாமல் உடற் கூட்டில்
திருடனாய் நுழைந்து
மெல்ல
அருவமாய் மேனிக்குள் படர்ந்து
மெல்ல மிக மெல்ல
ஆழ வேர் பரப்பி
ஒடுக்கவும் இயலாது
தடுக்கவும் முடியாது
என்று
உறுதியான பின்னாலே
உடல் உள்ளே
ஊர்ந்து விளையாடி
உடன் லேசாய் வலித்து
பூனை எலி விளையாட்டாய்
கவ்வி விடுத்து
கண நாள் நிறுத்தி
மீண்டும் தொடர்ந்து
திக்கெட்டும் திசை காட்டி
மருத்துவரை ஏய்த்து
பொய் எல்லாம் ஒழித்து
மெய்யாய்
பூமி அதிர்வும்
சுனாமி அலையும்
சேர்ந்து வந்தது போல்
பற்றிய உலகைப்
பறித்துப் போக
புற்று நோயென்னும்
வற்றாது வளரும்
எமன் எனில்
வெளிக் கொண்டான்
மேனியின் உள்ளுறுப்பை
மெல்லத் தின்னும் கோர அரக்கனே
உண்பதற்கு உனக்கு
உலகில் வேறொன்றும் இல்லையா ?
நீ பற்றிக் கொண்ட உடனே
அம்மனிதனை
அவன் சுற்றத்தை
தொற்றிக் கொள்ளும்
துக்கம் துயர் அறிவாயா ?
துஸ்டக் கொடுரனே
ஒற்றை மனிதனாய்
என்னை நினைப்பேனா ?
முந்தித் தவமிருந்து
மூவுலக இரணம் தாங்கி ( மனம், உடல், மனிதர் )
முதுமைப் பருவத்தில்
கைபிடியாய்
கழிவறைக்கு
கால் மறுத்து நடக்கா வேளையிலே
மேல் வலித்து
நடுங்கையிலே
தோள் கொடடா
செல்லமே என்ற
பெற்றோரை நினைப்பேனா ?
கைத்தலம் பற்றி
காதலாய் இறுக்கி
மெய்த்தலம் ஒப்படைத்து
கூடி வாழ
உயிர் கூடு பிரியும் வரை
தேடி நாடி
வளர்பிறை
வண்ணக் கனவுகளோடு
வாழ்வை ஒப்படைத்த
எந்தன் பத்தினியை
நினைப்பேனா ?
இல்லறத்தில் இணைந்து
இவ்வுலகம் மறந்த பொழுதுகளில்
நல்லறப் பரிசாக
நம்மூடாய் வந்த
பிள்ளைப்
பேர் செல்வங்களை
பிரியும்
கோரவலிக் கொடுமை
கொடுங் கோலனே
அறிவாயா ?
என் ரணம் மறைத்து
மாவலி பொறுத்து – எனை
பார்க்க வரும்
பாச உறவுகளை
பதை பதைக்க எண்ணாது
எல்லா வலியும் இறங்குவதாய்
வெளியே சிரித்து
உள்ளே அழுதிடும்
பரிதாப வாழ்வை
பார்த்துள்ளாயா ?
பலி கேட்கும்
புற்று நோயே!
வருவோர்
என் மரணத்தை
மண்டைக்குள் ஏற்றி
கண்ணுக்குள் பூட்டி
எனைத்தேற்ற
நல்லது நடக்கும் என
நா உரைக்கும் வேளையிலே -அவர்
கண்ணுக்குள்ளிருந்து
காட்சிகள் விரியும் – அக்
காட்சிகள் சொல்லியது
கதை முடிவு என்னவென்று – அந்தக்
கறும வலிகள்
என்னோடு போகட்டும்
இனியாருக்கும்
வேண்டவே வேண்டாம்
வந்தவர் பூமியில்
தங்கிட நினையார்
அது முடியா
கையும் காலும்
மெய்யும் சோர்ந்து
புலன்கள் மறையும்
பொழுது வந்து விட்டால்
பிரியும் முடிவையும்
பிரியமாய் ஏற்பார்
மரண வீடும் மகிழ்வீடாய்
மாறாதோ ?
எல்லாச் சடங்கிற்கும்
ஏற்ற மிகு காலமுண்டு
என்னை வன்முறையாய்
இழுத்தெடுக்கும் இக்காலம் – உனது
இறுதிக் காலமாய் இருந்தால்
அது போதும் எனக்கு
முடிந்த முடிவுகளை
கண்ணீர் திரும்ப
இனி அழைக்கா
உருவமாய் நானில்லை
உடலோடு நகர்வில்லை
அருவமாய் நானிருப்பேன்
அன்பு மனையாளை
ஆசைப்பிள்ளை
பேர் செல்வங்களை
பாசமிகு உறவுகளை
பார்த்துப் பக்கமாய்
நின்று கொள்வேன்
என் குடும்பம்
நன்றாய் உயரும் வரை
நாளும் அருகிருப்பேன்
ஆபத்துக் காலத்தில்
அவர் ஆன்மா
நான் தொட்டு
அக்கணமே
அவர்களைக் காத்திடுவேன்
வீணே கலங்காதீர்
வேண்டிய பணி முடித்த
பின்னால் தான்
விண்ணுலகம் புறப்படுவேன்
ஐயம் வேண்டாம்
அதுவரை நிறைவுடன்
இப்படிக்கு
அன்புடன் அருவ மனிதன்
நீள் துயர் நீங்கிட வேண்டி சமர்ப்பணம்
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.