ஒவ்வொருநாளும் வேலை முடிந்து வீடுவந்து சேர்ந்ததும் குளிப்பது வழக்கம். குளித்த பின்னர் துடைக்கும் போதெல்லாம் கால்,கையிலுள்ள தளும்புகள் எல்லாம் ஞாபகத்திற்குவரும்.(அவைகள் வீரத்தளும்புகள் அல்ல குறும்புத்தளும்புகள்.) அப்போதெல்லாம் அந்த அன்னையும் ஞாபகத்திற்க வருவார்கள். இது நீண்டகாலமாக என் மனத்திரையில் ஓடும் படம். நானும் அண்ணணும் மூன்று வயது வித்தியாசமானவர்கள்; ஒன்றாகவே சேர்ந்து திரிபவர்கள். பந்து விளையாடுவதில் தொடங்கி கடல் வற்றும்போது தக்கனையான் ,கடுக்காய் நண்டு பிடித்து குப்பை கொழுத்திச்சுட்டுச் சாப்பிடுவதில் தொடங்கி வேட்டைக்காக கலட்டிவரை சுற்றி வருவதுவரை ஒன்றாகவே சேர்ந்திருப்போம்.
எங்கள் பிஞ்சு கை,காலை முள்ளுகளும்,கல்லுகளும்,கடல் பாறைகளும்பதம் பார்ப்துமுண்டு. எங்களிற்கு தெரிந்த ஒரே மருத்துவம் மண்ணை எடுத்து காயத்தின்மேல் தூவினால் இரத்தம் நின்றுவிடும் என்பதே! வேட்டைதொடரும். எங்கள் பணிகள் முடிந்து இரவுத் தூக்கத்துக்கு போனால் எங்கள் முக்கல் முனகலில் இருந்து அம்மா புரிந்து கொள்வா எங்களிற்கு ஏதோ சுகவீனம் என்று. காலை எழுந்து எங்கள் நிலவரத்தை அறிந்து காயங்களின் வீரியத்தை உணர்ந்து; காலையோ, மாலையோ சவுக்காலை பக்கமாக எங்களை அழைத்துச்செல்வா. கலைவாணி வீதிக்கு எதிர்திசையில் வலதுபக்கம் திரும்பி இருபுறமும் கருக்குமட்டையால் அடைக்கப்பட்ட பாதைஊடாக அழைத்துச் செல்வா. அந்த ஒடுங்கலானபாதை பகல் நேரமானாலும் சற்று இருண்டு இருக்கும். அப்பாதையால் பதினைந்து முழம் நடந்து சென்றால் பலகையால் செய்யப்பட்ட படலைவரும். படலையை திறந்து முற்றத்திற்கு சென்றால் தெற்குப் பக்கம் பார்த்தபடி விறாந்தையோடு கூடிய இரண்டு அறையுள்ள கல்வீடும் அதற்கு எதிர்த்திசையாக மேற்குப்பக்கம் பார்த்ததால்போல் ஓலையால் மேயப்பட்ட சமையல் கூடமும் இப்போதும் என் விளித்திரையில் மங்கலாக தெரிகிறது.
எங்களை கண்டவுடன் கிழக்கு பக்கமாகவுள்ள அறைக்குள் போய் ஓர் பெட்டியை எடுத்துவந்து எங்களோடு திண்ணையில் அமர்ந்து கொள்வா. ஓர் ஓரலான நடுத்தர வயதைத்தாண்டிய பொதுநிறமான மெல்லிய சின்ன உருவம் அப் பெட்டியை திறந்து மருந்துகளை வெளியில் எடுத்துவைக்கும். எங்கள் கால்களை நீட்டச்சொல்லி எங்கள் மண் போட்டு மூடிய காயங்களை திறந்து சீளையையும், இரத்தத்தையும், எந்த முகச் சுளிப்புமில்லாமல் துப்பரவு செய்து மருந்து கட்டி மாற்றுவார். இந்த சேவைக்காக எனது அம்மா அவவுக்கு பணம் கொடுத்ததை நான் பார்த்ததில்லை. இப்படியாகப் பல பேருக்கு இவ் அன்னை இச்சேவையை செய்ததை நான் அறிவேன். ஊறணி மக்களுக்கு அவ செய்துள்ள மருத்துவ சேவைகாகவும் என் மன அமைதிக்காகவும்; அருமைநாயகம் அமலோற்பவம் அவர்களை நினைவு கொள்வதில் மன நிறைவு கொள்கிறேன்.
வின்சன் அந்திரேஸ்பிள்ளை