Home / வசந்தியின் பக்கங்கள் / உயர் பாதுகாப்பு

உயர் பாதுகாப்பு

‘உ. பா. வ.’ என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான ‘பாதுகாப்பு’ அல்ல என்பதே நான் விளங்கிக் கொண்டது. “பிள்ளை அவங்கள் வெளிக்கிட்டிட்டாங்களாம், சாப்பாட்டை நான் எடுக்கிறன் நீ தம்பியோடை உடுப்பு பாக்கைத் தூக்கிக் கொண்டு கெதியா வெளிக்கிடு”…அம்மா பயத்தில் பரபரக்கத் தொடங்கினாள். தம்பி யோசனையின்றி தன்னுடைய நண்பர்களுடன் வெட்டையில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். தெருவிலே சயிக்கில் முன் பாரிலே ஒரு சின்ன மூட்டையும் பின் கரியரிலே ஒரு மூட்டையுமாக மிதிக்கத் தொடங்கியிருந்த பக்கத்து வீட்டு ராசன் மாமா விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு “டேய் அவங்கள் வெளிக்கிட்டிட்டாங்களாம் நீங்கள் இஞ்சை நிண்டு என்ன செய்யிறியள்? ஓடுங்கோ வீட்டை; அங்க வீடுகளில உங்களத் தேடிக் கொண்டிருக்கப் போகினம்” என்று பிள்ளைகளைத் துரத்தி விட்டு வேகமாக மிதிக்கத் தொடங்கினார். நிலா தம்பியையும் தன்னுடையதும் தம்பியுடையதுமான புத்தகப் பொதியையும் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு புறப்பட, அப்பா அம்மாவை ஏற்றிக் கொண்டு ” பிள்ளை கெதியாக பின்னால வா” என்று சொல்லிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பத் தொடங்கினர்.

DSCF2992அம்மா சயிக்கிலில் இருந்த படியே வீட்டைத் திரும்பிப் பார்த்தா. அம்மாவுக்கு எப்போதுமே வீட்டை விட்டு விட்டு வெளிக்கிட விருப்பமே இருப்பதில்லை. ஆனாலும் இருந்து வரக் கூடிய அசம்பாவிதங்களை ஏற்றுக் கொள்ளும் துணிவும் இல்லை. அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஊர் ஓடிக் கொண்டிருந்தது. இடைக்கிடையில் “ஐந்நூறு மீற்றர் தூரத்தில வந்திட்டாங்கள், நானூறு மீற்றர் தூரத்தில வந்திட்டாங்கள்” என்று யார் யாரோவெல்லாம் தகவலும் சொல்லிக் கடந்து கொண்டிருந்தார்கள். இது இண்டைக்கு நேற்றைக்கு நடந்து கொண்டிருக்கிற நிகழ்வு இல்லை. ஆனால் இப்ப கொஞ்ச நாட்களாக உக்கிரமடைந்து வருகிறது. பலாலி இராணுவ முகாமிலிருந்து காங்கேசன்துறை வரை வந்து உலாப் போகும் பரப்பளவுக்குள் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வு இதுவாகிப் போனது. ஒவ்வொரு தடவையும் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடும்போது, அன்று இரவோ அல்லது அடுத்த நாளோ திரும்பி விடுவதுண்டு. அதுவரை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் வீடுகளில் ஒண்டிக் கொண்டு மனம் வெதும்பிக் கொண்டிருப்பார்கள். அன்றைய புறப்பாடும் அவ்வாறே ‘அவர்கள்’ வந்து மீண்டும் சிக்கலின்றித் திரும்பியதும், ஊர் தமதூர் திரும்பியது. இப்படி புறப்பாடு அடிக்கடி நடந்து கொண்டிருந்த வேளை, நிரந்தரமாகவே வெளியேறும் நாள் வந்தது. “கோவிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்” என்பதற்கு அறிவியல் ரீதியாக தற்போது விளக்கம் கண்டிருக்கிறார்கள். அதாவது கோவில் கோபுரங்களும் கலசங்களும் அதன் உயரத்தின் அளவுக்கேற்ற பரப்பளவுடைய நிலப்பகுதியை இடி, மின்னல் போன்ற அனர்த்தங்களில் இருந்து காக்குமாம். ஆனால் எமது மக்களுக்கோ கோவில் அகதிகளாய்த் தஞ்சமடையும் இடமாயிற்று. நான்கு ஊர் தள்ளியிருந்த ஓர் ஊரின் கோவில் அடைக்கலம் கொடுத்தது.மணித்தியாலங்கள் நாட்களாகி நாட்கள் வாரங்களாக இருக்குமிடம் சுகாதாரமற்றதாகியது. சொந்தத் தொழில்களை விட்டு விட்டு ‘சும்மா’ இருப்பதும் சாத்தியமற்ற ஒன்றாகியது. இடையில் வீடுகளுக்குள் விட்டு வந்த பொருட்களை யார் கொண்டு போனார்களோ என்கின்ற ஏக்கம் வேறு. அம்மாவுக்கு வீட்டுக்குப் போக வேணும் என்கின்ற பேராசை. அதை விட எங்களுடைய வீட்டைக் கட்ட எத்தனை கடின உழைப்பைக் கொடுத்திருந்தார்கள் எமது பெற்றோர் என்பதை ஒவ்வொரு பேச்சின் போதும் உணர்ந்திருக்கிறோம். ஒரு தடவை எங்களுடைய வீட்டுக்கு மின்னிணைப்பு வேலை ஒன்றுக்காக ஒரு சுவர்ப் பகுதியைத் துளையிட வந்திருந்தனர். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடல்லவா? சுவர் அசைய மறுக்க, வந்தவர்கள் சுவரில் சுத்தியலால் தொடர்ந்து அறைந்து கொண்டிருந்தனர். அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. ஏனம்மா என்று கேட்டதற்கு, “சுத்தியலின்ர ஒவ்வொரு அடியும் எனக்கு நெஞ்சில விழுகுது பிள்ளை” என்று அம்மா பதில் சொன்னபோது, எனக்கு அங்கே சுவர்களாலான வீடு தெரியவில்லை; பெற்றவர்களின் உழைப்பும் வியர்வையும் அவர்களது உணர்வுகளும் சேர்ந்த ஓர் உயிர் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே தெரிந்தது.

கடலோடு சேர்ந்திருந்தது எமது வீடு. வீட்டிலிருந்து இறங்கினால் கடற்கரைதான். கடலோடு சேர்ந்திருந்ததால் தினமும் கப்பல் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தது எமக்கு. அடிக்கடி பெரிய கப்பல்களின் உட்பகுதியையும் ஏறிப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்திருந்தது இளம் வயதில். எங்களுடைய வீடு மூன்று அறைகளையும், ஒரு திறந்த வரவேற்பறை, சமையலறை (உணவுண்ணும் பகுதியோடு சேர்ந்து) என்று அமைந்திருந்தது. பெரியறை, சின்ன அறை, சைட் அறை என்று தனித் தனிப் பெயர்கள் வேறு கொடுத்திருந்தோம் அறைகளுக்கு. சைட் அறை மாலை நேரத்தில் படிக்கும் அறையாகவும் அமையும். பெரிதாக சுவரில் ஒரு கரும்பலகையும் அமைத்திருந்தோம். சமையலறையுடன் சேர்ந்து அமைந்திருந்த உணவுண்ணும் அறைக் கதவத் திறந்தால் நேரே தெரிவது பரந்த கடலும் அதிலிருந்து எமக்காகவே எழுவது போன்று தெரியும் காலைச் சூரியன். ஒரு தேநீரைப் போட்டுக் கையில் வைத்துக் குடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கஇ சூரியன் முழுமையாக மெல்ல மெல்ல கடலிலிருந்து விடுபட்டு மேலே வந்து விடுவான். என்னால் அடித்துச் சொல்ல முடியும் இப்படியொரு காட்சியைக் காணாத கண்கள் கண்களே அல்ல என்று. முற்றம் பின்பகுதியை விட கூடிய பகுதியாக அமைந்திருக்கும். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இரவில் கழிவறைக்குப் போவது. தனியாகப் போக பயமாக இருக்கும். (நாட்டிலே நித்திரையில் நடப்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதால் வந்த பயம்) ஏனென்றால் எமது கழிவறை வீட்டின் ஒரு அறையோடு சேர்ந்துதான் இருந்தது. ஆனால் வீட்டின் பின் பகுதியைப் பார்த்தால் போல் அமைத்திருந்தார்கள். எனவே அங்கு போவதென்றால் வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்னால் போக வேண்டும். அதற்காக அம்மாவை அடிக்கடி எழுப்புவோம். ஆனால் பகலிலோ அதே வழியாக யன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு வீட்டின் ஓட்டுக் கூரை மேல் ஏறி அங்கே காய்த்து மறைந்து தொங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்காய்கள் பிடுங்கி ஓட்டிலிருந்து முற்றத்தில் குதிப்போம். (இப்போது நினைக்கப் பயமாக இருக்கிறது) இது தவிர வீட்டின் சிம்னி மேற்பகுதிமீது பாய்விரித்து பனாட்டுக் காய வைப்போம். இப்படிப் பல வேலைகளை வீட்டின் கூரை மீது சாகசமாக நடத்துவோம். ஆனால் ஏறிய வழியே இறங்க மாட்டோம் நேராக கூரையிலிருந்து முற்றத்துக்கு குதிப்பதுதான் எமது ஸ்டைல். இப்படியெல்லாம் உயிருடன் சேர்ந்து விட்ட உணர்வுகளின் திரட்சிகளை யாரால் பிரிக்க முடியும்? காலத்துக்கும் நாமும், வீடும், ஊரும், ஒழுங்கைகளும், இளமைக் காலங்களும் உறைந்து போயுள்ளன உள்ளே. அம்மாவின் ஆசை நிறைவேறியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் போய்ப் பார்ப்போம் என்று ஊருக்கு கொஞ்சம் துணிவாகத் திரும்பினோம்.

கலைந்திருந்த வீட்டை ஒழுங்கு படுத்தி வழமைக்குத் திரும்ப முயற்சித்தோம். இந்தக் களைப்புத் தீருவதற்குள் “வடமராட்சி விடுவிப்பில்” விழுந்த ஷெல்கள் திரும்பவும் ஓட வைத்தன. ஆளாளுக்குத் தலை தெறிக்க ஓடினோம் பாதுகாப்புத் தேடி. இப்போதைக்கு உயிருடன் இருந்தால் மீண்டும் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தோம். அந்த ஊரிலே ‘சின்னம்மா’ என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிள்ளைகள் எல்லோரும் குடும்பமாகித் தூரப் போய் விட தனியே ஒரு பெண்ணின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மகனின் அனுமதியுடன் எமது உறவினர் ஒருவரின் அறிமுகத்தினூடாக சின்னம்மாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். தனது தனிமையைப் போக்க ஆட்களுடன் பழகுவதும் பேசுவதும் பிடித்திருந்ததால் எங்களது வருகை சின்னம்மாவை உற்சாகப் படுத்தி இருந்தது. அதே நேரம் சின்னம்மாவுக்கு நல்ல மனது இருந்திருக்க வேண்டும் எங்களை அனுமதிக்க என்று பின்னர் நான் யோசித்ததுண்டு. ஏனென்றால் எங்களுக்கு முதலில் ஒரு அறையைத் தான் தந்தார். ஆனால் பிறகு ஓட வழி தெரியாது மிகுதி ஊரவர்களும் அங்கேயே வந்து சேர,சின்னம்மாவின் வீடு திருவிழாக் கோவிலாகியது. சின்னம்மாவுக்கு கதைக்க வேணும், கனக்கக் கதைக்க வேணும். அதுவும் தனது பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லோரைப் பற்றியும் பெருமையாய்க் கதைக்க வேணும். சின்னம்மாவுடைய பேத்தி ஒருவர் இந்தியாவிலே மருத்துவக் கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்தார். எங்களுடைய பல்கலைக் கழகங்களில் இடம் கிடைக்காது போன பல வசதியுடையவர்கள் அப்படி இந்தியாவிலே படித்துக் கொண்டிருந்தார்கள். சின்னம்மாவின் பேத்தி அங்கே உள்ள சில சினிமா உலகைச் சேர்ந்தவர்களுடன் படம் எடுத்து அனுப்பியிருந்திருக்கிறார். அவற்றை எடுத்துக் காட்டி பெருமை பேசிக் கொண்டிருப்பார் சின்னம்மா உயிரைத் தூக்கிக் கொண்டு அண்டி வந்த உள்ளூர் அகதிகளுடன். ஆனால் சின்னம்மா நல்லவர். இதை விட அம்மக்களுக்கு வேறெந்த தொல்லையும் கொடுக்கவில்லை. சின்னம்மாவின் மகன் இடைக்கிடையில் வந்து பார்த்துக் கொண்டு போவார். வந்திருப்பவர்களால் தனது தாய்க்கு தொல்லை வந்து விடக் கூடாது என்ற நியாயமான கவலை அவருக்கு.

மாமரங்கள் சூழ்ந்த மிகப் பெரிய வளவின் நடுவே அமைந்திருந்த பெரிய வீடு அது. அந்த வீட்டைச் சுற்றிவர குடும்பம் குடும்பமாக தனித் தனியே அடுப்பெரித்துக் கொண்டிருப்பார்கள். உதவி நிறுவனங்களின் தயவால் சாப்பாட்டுக்குச் சிக்கல் அதிகமிருக்கவில்லை. மாலையில் சேர்ந்து செய்தி கேட்பார்கள். பின்னர் அதை அலசுவார்கள். கிணற்றடி ஏறக்குறைய பதினெட்டு மணி நேரம் விடுப்பின்றி இயங்கிக் கொண்டே இருந்தது. கிணறு வாரிக் கொடுத்தது. ஒருநாள் ஊரே பாவித்த கழிவறைக் குழி நிரம்பிக் கொண்டது. என்ன செய்வது என்று எல்லோரும் யோசித்தார்கள். சின்னம்மாவின் மகன் செய்தி கேள்விப்பட்டு வந்தார். எமது ஊரவர்கள் சேர்ந்து தாங்களே அருகிலே ஒரு குழி வெட்டுவதாகச் சொல்லி வெட்டத் தொடங்கினார்கள். அது ஒரு ஒழுங்குக்கு வருமட்டும் பெண்கள் இருட்டும் வரை காத்திருந்து தலை மறைத்து, அம்மாமாரின் துணையுடன் தூர மறைவிடம் சென்று வந்தார்கள். குழி வெட்டிப் பிரித்த ஆண்கள் அழுக்குத் தீர நீண்ட நேரம் அள்ளிக் குளித்தனர். எங்களுக்கு இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்கின்ற யோசனை உலுப்பத் தொடங்கியது.அம்மாவின் நெற்றியில் வீட்டுக்குப் போக வேணும் என்ற சிந்தனை எழுதி ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்த முறையும் அம்மாவுக்கே வெற்றி. அம்மாவின் வெற்றி வானத்தில் இருந்து வந்தது. பொதிகளாக வந்து விழ,சீர் தூக்கிப் பார்க்க முடியாத மக்கள், “ஆஹா! இவனல்லவோ மகன் “என்றார்கள். “தாய் போல மகா கெட்டிக்காரன்” என்றார்கள். “இனி எல்லாம் சரி வரும்” என்றார்கள். ஊருக்குப் போக முடிவெடுத்து, சின்னம்மாவைக் கட்டிப் பிடித்து நன்றி கூறி விடை பெற்றோம். சரியாக எதுவும் வராமலேயே மீண்டும் ஊருக்குத் திரும்பியிருந்தோம். வந்தவர்கள் எமது பெண்களின் பாவாடை சட்டைகளையும், ரீ ஷேர்ட்டுகளையும் விடுப்புப் பார்த்தனர். கோவில் குருவானவர் பூசையின் பிரசங்கத்தில் பெண்களை அவதானமாக ஆடைகளை அணியும் படி அறிவுறுத்தல் விடுத்தார். வந்தவர்கள் மக்களுடன் தாராளமாக பழக முற்பட்டனர். காங்கேசன்துறை குவாட்டர்ஸ் கிணறுகளில் ஆசைதீர அள்ளிக் குளித்தனர். பிறகு “உங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்சனை இல்லை, அழகழகான பெரிய பெரிய கல் வீடுகளில் எல்லோரும் வாழுகிறீர்கள், பிறகேன் சண்டை?” என்றார்கள். பெரியவர்கள் முறைத்தனர்.முந்தையவர்கள் போலவே இவர்களும் அடிக்கடி வலம் வந்தார்கள். கிழக்கெல்லையிலிருந்து மேற்கெல்லை வரை வீடுகளின் வேலிகளைப் பிரித்து தாமே பாதை போட்டு நடந்தனர். மக்களுக்குப் பாதுகாப்பாம். பெண்கள் சுருங்கிக் கொண்டனர் அநேகமாக வீடுகளுக்குள். சரிவரும் என்று அப்பாவித்தனமாக எண்ணிய மக்களின் எண்ணம், பன்னிரண்டு உயிர்ப் புறாக்கள் காங்கேசன்துறை பலாலி வீதியால் அழைத்துச் செல்லப்பட்டபோது தவிடு பொடியாகியது. இம்முறை காட்சிகளின் கோரம் பெரிதாகியது.

அடுத்த ஓட்டத்துக்கு ஊர் தயாராகியது. ஆனால் இம்முறை திரும்பி மீண்டும் ஊருக்குள் கால் வைப்போம் என்கின்ற எண்ணம் அநேகரிடம் காணாமல் போயிருந்தது. சிலர் “செத்தாலும் இஞ்சயே கிடந்தது சாவோம்” என்று முரண்டு பிடித்தார்கள். ஊர் கிளம்பியது. ஷெல்கள் விசிலடித்தபடி அருகருகே உராசிச் சென்றன. எங்கள் வீட்டு முற்றத்திலே காய்த்திருந்த மாதுளைகள் பழுக்க இன்னும் காலமிருந்தது. தென்னைகள் நிறைய காய்கள் பழுத்தும் பழுக்காமலும் தொங்கிக் கொண்டிருந்தன. அம்மா இம்முறையும் வீட்டைத் திரும்பிப் பார்த்தா. கண்கள் கலங்கியிருந்தது. நம்பிக்கையின்மை கண்களில் தெரிந்தது. அப்பா கோபமாகி “வந்து சயிக்கிளில ஏறு, எங்களுக்கு மட்டுமே இது?” என்றார். அம்மா ஏற, சயிக்கிள் உருளத் தொடங்கியது. கடலும், தெருக்களும், வெட்டைகளும், காங்கேசன்துறைப் பூங்காவும், சீமெந்துப் புகையும், கீரிமலைக் கேணியும் தூரவாகிப் போயின. இந்தத் தடவை மீண்டும் சின்னம்மாவைத் தொந்தரவு செய்யும் துணிவு எம்மிடம் இல்லை. வேறிடம் நோக்கி… (* நியாயமாற்ற மனிதர் முன் இன்னும், இத்தனை வருடங்கள் கழித்தும் எங்கள் மக்கள் தெருவிலே நிற்கிறார்கள்).

Vi.Alvit 22.11.2013.

About ratna

One comment

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang