பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம்
நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு
விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும்
வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய்
வதையுறும் நிலையிலும் விழித்திருக்கும் உள்ளூர
வானோடும் மண்ணோடும் பிணைந்திருந்த காலங்கள் (பலமாய் எழுந்திரு…)
கடல ளந்த படகுகளும் ஆர்க்கும் அலைகளும்
கால ளந்த தெருக்களும் ஆசை நினைவுகளும்
கட்டிக் காத்திருந்த நம் உயிர் கொண்ட மனைகளும்
கால வெள்ளத்தில் கொள்ளை போகலாமோ (பலமாய் எழுந்திரு…)
எத்தனை காலம் ஏதிலிகளாய் சொந்த மண்ணிலே
செத்து வாழ்ந்திடும் நிலைதனை மாற்றிட வேண்டும்
எத்துணை துயரம் தான் தோள்களிலே சுமந்தபடி
நித்தமும் கூனிடும் நிலை நிமிர வேண்டும் (பலமாய் எழுந்திரு…)
வலிகளே வாழ்வாகிப் போனதோ நமக்கென்று
வலி கொள்ளும் மனமதை தூரத் தூக்கியெறி
வலி தான பிடி தன்னை நமதாக்கிக் கொண்டு
வெல்லும் வழி கண்டு மீட்டிட நம் வாழ்வை. (பலமாய் எழுந்திரு…)