ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த அறிவித்தலை விடுவித்துள்ளனர்.
முக்கியமாக டெங்கு நோய்களைப் பரப்பும் பற்றைகள், பாதீனியச் செடிகள் காணப்படின் உடனடியாகத் துப்பரவு செய்யுமாறும் இல்லையேல் பொலிசார் காணிகளைக் கையகப்படுத்தி இராணுவத்தைக் கொண்டு துப்பரவு செய்யப்படுமெனவும் மீண்டும் காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டுமெனில் ஐம்பதுனாயிரம் பணம் மற்றும் பற்றைகள் துப்பரவு செய்யச் செலவான பணத்துடன் சேர்த்து மொத்தமாக பணம் செலுத்துவதுடன் மீண்டும் பற்றைகள் வளரவிடமாட்டேனென்ற உறுதி மொழியை வழங்கியே காணியை மீளப்பெற முடியுமென காரசாரமாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வறிவித்தல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் காங்கேசந்துறை மற்றும் பலாலி பொலிசாரின் பொறுப்பதிகாரிகளின் பிரசன்னத்தில் பிரதேச செயலரின் தலைமையில் நடைபெற்ற பிரதேச பாதுகாப்பு அமைப்புக்களின் கூட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராம அலுவலரை செயலாளராகக் கொண்டு கிராமங்களின் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எமது பிரிவின் கிராமிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக திரு.குளோட் எட்வேட் (றொபேட் ) அவர்கள் தலைவராக உள்ளார். இவரும் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். அப்போதே பிரதேச செயலாளரால் இவ்வறிவித்தல் விடப்பட்டது.
பாதீனியச் செடியால் டெங்கு மட்டுமல்ல வயிற்றோட்டம் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் பரவுவதாலேயே இந்த நடவடிக்கையைத் தாம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. ( உறவுகளே, புதிய அரசாங்கம் காணியைப் பிடுங்கினால் மீளவும் தருவாங்களோ இல்லையோ யார் கண்டது.)