யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் பல நூறு வருடங்களை பழைமையான பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் என்பவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இருந்த இடமே தெரியாமல் அவை இருந்த இடத்தில் பாரியளவில் இராணுவ மாளிகை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட தான் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
அத்துடன் சுமார் 400 பேருக்கு சொந்தமான 60 ஏக்கர் காணியும் இந்த பங்களாவுக்காக இராணுவத்தினரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வலிகாமத்தில் சில இடங்களை மீள குடியமர்வுக்காக இராணுவம் கடந்த ஆண்டுகளில் அனுமதித்துள்ளபோதிலும், அந்த பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பகுதி மக்களின் சகஜ வாழ்க்கையினை மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை எல்லையுடனான தையிட்டி கிராமத்தில் கெமுனு விகாரை என்ற புதிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெமுனு விகாரையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் 7 ஆவது பட்டாலியன் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த 7 ஆவது பட்டாலியன் முகாமுக்கு பக்கத்தில் பிரபல்யமான ஊறணி அந்தோனியார் ஆலயமும் ஊறணி கனிஷ்ட வித்தியாலயமும் இருக்கின்றன. 7 ஆவது பட்டாலியன் முகாமில் இருந்து 1 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவ பொலிஸாரின் முகாம் 15 ஏக்கர் தனியார் காணியில் அமைந்துள்ளது.
இராணுவ பொலிஸ் முகாமில் இருந்து ஏறத்தாழ 500 மீற்றர்கள் தொலைவில் மிகவும் விசாலமான 10 ஆவது கள பொறியியலாளார் தலைமையகம் இருக்கிறது. இதன் அளவு 2000 ஏக்கர்களுக்கும் அதிகமானது. இது மயியிலிட்டியில் மட்டும் 8 கிராம சேவையாளர் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளது.
சுமார் 200 வருடங்கள் பழைமையான மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இந்த முகாமை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த முகாம் வேலியில் அமைக்கப்பட்டுள்ள வாசல் வழியாகவே செல்லவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. என்று இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IBC:08.03.21
https://www.ibctamil.com/srilanka/80/161066
முழு ஆவணம் pdf
https://www.oaklandinstitute.org/sites/oaklandinstitute.org/files/endless-war-web.pdf