ஊரின் பலமாய் – ஊறணி
ஊர் வளர்ச்சியின் பாலமாய்
உழைத்த உயர்ந்த மனிதர்
ஓய்ந்து போனார்.
அமரர் மரியாம்பிள்ளை
அறியார் உண்டு அயலில்
சம்மாட்டியார் மரியாம்பிள்ளை
அறியார் உண்டோ.
காரமும் கற்கண்டும்
கலந்த கலவையவர்
பாமரர் காரமாய் பார்த்திடுவார்
பகுத்தறிந்தோர் கற்கண்டாய் உணர்ந்திடுவார்
கணக்கு வழக்கும்
காரியத்தில் கண்டிமையும்
காலக் கணிப்பும்
காண்போரை கவர்ந்திழுக்கும் ;
உதவிகள் புரிவதிலும்
ஊர்மக்கள் உழைத்து வாழ
உழைப்புக்குள் வாழ ஊக்குவிப்பார்
பதவிகள் வந்த போதும்
பணம் பார்த்திடா மேன் மனிதர்
சிரிப்பும் சுருட்டும் -ஓய்வில்
சீட்டாட்ட அழைப்பும்
வண்ண உருவமாய் – என்னுள்
வந்து போகின்றார் சம்மாட்டியார்;
சில சமயம் கோபித்துக் கொண்டாலும்
கணப்பொழுதில் தலை சொறிந்து
குழந்தையாய் குழைந்து சிரித்து
வளைந்து கொடுக்கும் பண்பு
வணங்காதோரையும் வணங்க வைக்கும்
அன்னாரின் வாரிசுகள்
அவ்வூர் மக்கள் நாம் – அவர்போல
எம் ஊரவரை வளர்த்திடலே
இப்பெரு மகனின் சாந்திக்கு
நாம் செய்யும் கைமாறு;
ஊரவன் ;